ஒமைக்ரானை விட வேகமாக பரவும் ‘பி.ஏ., – 2’ வைரஸ்: ஆய்வில் தகவல்

வாஷிங்டன் : ‘ஒமைக்ரான்’ வைரசை விட, அதன் மரபணு மாறிய மற்றொரு பிரிவான ‘பி.ஏ., – 2’ ரக வைரஸ் அதிவேகமாக பரவி வருவது, ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுதும், கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலையில், ஒமைக்ரான் எனப்படும் மரபணு மாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்தப் பரவலை கட்டுப்படுத்த, பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் குறித்து, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனினும், மரபணு மாறிய ஒமைக்ரானின் ஒரு பிரிவான பி.ஏ., – 2 ரக வைரஸ், ஒமைக்ரானை விட அதிவேகமாக பரவி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ள நபர்களுக்கு, ஒமைக்ரான் வைரசின் லேசான பாதிப்பு மட்டுமே ஏற்படுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது.

dinamalar