மூடாவுக்கு கூட்டணியாகும் கட்சி – வாரிசானா? – பக்காத்தானா?

இராகவன் கருப்பையா –முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் தோற்றுவித்துள்ள ‘மூடா’ கட்சி நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்காத்தான் ஆட்சியின் போது மகாதிரின் செல்லப் பிள்ளையைப் போல் இருந்த சைட் சாடிக் தோற்றுவித்த அக்கட்சியின் வளர்ச்சி தற்போது எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளதை யாரும் மறுக்க இயலாது.

அவருடைய முயற்சியின் பேரில் வாக்காளர்களின் வயது வரம்பு 21லிருந்து 18ஆகக் குறைக்கப்படுள்ளதானது அக்கட்சிக்குப் பெரும் சாதமாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இந்தச் சட்டத் திருத்தம் அடுத்த பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 6  மில்லியன் புதிய இளம் வாக்காளர்களைக் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு காய்களை நகர்த்தும் சைட், பல்லின உறுப்பினர்களைக் கொண்ட தனது கட்சியை இதுவரையில் எந்த ஒரு கூட்டணியிலும் இணைக்கவில்லை. தனித்தேதான் அதனை வழி நடத்தி வருகிறார்.

ஆனால் ஷாஃபி அப்டால் தலைமையிலான சபாவின் வாரிசான் கட்சி மூடாவை தற்போது வசீகரப்படுத்தியுள்ளதைப் போல் தெரிகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டில் 1MDB தொடர்பாகக் கேள்வி எழுப்பியதற்காக அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரான ஷாஃபியை அப்போதைய பிரதமர் நஜிப் அதிரடியாக இடை நீக்கம் செய்தது வரலாறு. அதனைத் தொடர்ந்து கட்சியை விட்டு விலகிய ஷாஃபி சிறிது நாள் கழித்து வாரிசான் கட்சியைத் தொடக்கியதும் நாம் அறிந்த ஒன்றே.

கிழக்கு மலேசிய அரசியலில் குறுகிய காலத்திலேயே பலமிக்க ஒரு கட்சியாக உருவெடுத்த வாரிசான், பக்காத்தான் கூட்டணியில் இணைந்து கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் சபா மாநிலத்தைப் புரட்சிகரமாகக்  கைப்பற்றியது ஏதோ உண்மைதான்.

ஆனால் பிறகு உள்கட்சி பூசல்களினாலும் அரசியல் தவளைகளின் தாண்டவத்தாலும் அக்கட்சி சன்னம் சன்னமாக வலுவிழந்து இடையிலேயே ஆட்சியை இழந்ததும் நமக்குத் தெரியும்.

இத்தருணத்தில்தான் ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி’ என்பதைப் போல முன்னாள் பிரதமர் மகாதீரின அறிவிப்பு ஒன்று ஷாஃபிக்கு உத்வேகத்தைக் கொடுத்தது.

எதிர் கட்சித் தலைவர் அன்வார் பிரதமராகாமல் இருப்பதை உறுதி செய்வதையே தனது பிரதான இலக்காகக் கொண்டுள்ள அவர், நாட்டின் அடுத்த பிரதமராவதற்கான தகுதி ஷாஃபிக்கு உள்ளது என்ற ஒரு அறிவிப்பைச் செய்து உசுப்பேற்றி் விட்டார்.

இதனை ஒரு தன்முனைப்பாகக் கொண்டு, ஷாஃபி தனது கட்சியின் சிறகை விரித்துத் தற்போது தீபகற்ப மலேசியாவிற்கும் அதனை விரிவுபடுத்தி வருகிறார்.

பிரதமராக வேண்டும் என்ற ஒரே இலக்கைக் கொண்டு தனது நகர்வுகளை மேற்கொண்டு வரும் அவர் மூடாவை அரவணைத்து 3ஆவது அணியை அமைக்கும் பணியில் இப்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் மேலும் பல முக்கிய தலைவர்கள் வாரிசானை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அக்கட்சியுடனான சகாவசம் மூடாவை பொருத்த வரையில் ‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவதைப் போல்’தான் என்றால் அது மிகையில்லை.

அதிக அளவிலான இளையோரை அரசியலில் ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும் என்றும் ஊழலற்ற ஆட்சிக்கு வழி கொணரவேண்டும் எனவும் தனது அரசியல் பயணத்தைத் தொடரும் சைட் சாடிக்கிற்கு வாரிசானுடனானக் கூட்டு பாதகத்தையே ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

‘பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாக்கூட இருக்க முடியாது’ என்பதைப் போல இவ்விரு கட்சிகளின் இலக்குகள் வெவ்வேறு திசைகளை நோக்கிப் பயணிக்கின்றன.

மூடாவின் உதயம் இளையோர்களை ஈர்ப்பதில் அம்னோவுக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தும் எனச் சுகாதார அமைச்சர் கைரி அண்மையில் கருத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

எனவே வாரிசானை நம்பி மோசம் போகாமல் அனுபவமிக்க கூட்டணியான பக்காத்தானுடன் இணைந்து செயல்படுவதே மூடாவின் அரசியல் இலட்சியங்களுக்குச் சாதகமான ஒன்றாக இருக்கும்.