நவம்பர் 2018-இல் சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கலவரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் விசாரணையில் சாட்சியளித்த ஒருவர், காலமான தீயணைப்பு வீரர் முகம்மது அடிப் முகமது காசிமை யாரும் தாக்கியதைக் தான் பார்க்கவில்லை என்று கூறினார்.
அந்த சம்பவத்தின் போது நடந்த முதல் கலவரம் இதுவாகும். அப்போது கும்பலாக வந்த ஒரு குழுவினர், கோயிலில் இருந்தவர்களைச் சுற்று வளைத்தனர்.
கோவில் நிருவாக உறுப்பினர் எம் நாகராஜு சாட்சியளிக்கையில், கோவில் வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எரித்ததற்கு அல்லது சேதப்படுத்தியதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகம்மது சைபுல்லா அப்துல்லா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கிர்த்திராஜ், 10வது அரசுத் தரப்பு சாட்சியான நாகராஜுவிடம் இன்று குறுக்கு விசாரணை நடத்தினார்.
கடந்த அக்டோபரில் சாட்சியளிக்கையில், 66 வயதான நாகராஜு, அந்த சம்பவத்தன்று சுமார் 200 இளைஞர்கள், பெரும்பாலும் தடிகளுடன் ஆயுதம் ஏந்தியபடி, வளாகத்தைக் கட்டுப்படுத்த கோவிலுக்குள் நுழைந்தபோது தனக்குக் காயமோ அல்லது இரத்தம் சிந்தவோ இல்லை என்று தனது சாட்சியளித்தார்.
அந்த சம்பவத்தன்று முகமட் அடிப் முகமட் காசிம் என்ற தீயணைப்பு வீரர் மரணமடைந்தார்.
மேலும் சாட்சி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட 17 நபர்களில் தன்னால் யாரையும் குறிப்பிட்டு அடையாளம் காட்ட இயலாது என்றும் அவர் வழக்கறிஞரிடம் ஒப்புக்கொண்டார்.
“நவம்பர் 27, 2018 அன்று நடந்த கலவரம் குறித்து நான் எந்த அறிக்கையும் பதிவு செய்யவில்லை,” என்றும் கூறினார்.
முதல் கலவரம்
நவம்பர் 26, 2018 அதிகாலையில் கோயில் பகுதிக்குள் புகுந்த இளைஞர்கள் குழு ஒன்று கோயிலுக்குள் பக்தர்களுடன் சண்டையிட்டதைத் தொடர்ந்து அந்த முதல் கலவரம் வெடித்தது.
இரண்டாவது கலவரத்தின் போது, சுபாங் ஜெயா தீயணைப்பு வீரர் அடிப் பலத்த காயமடைந்தார். நவம்பர் 27 ம் தேதி அதிகாலையில் தீயை அணைக்க வந்த ஒன்பது தீயணைப்பு வீரர்களில் அவரும் ஒருவர். மூன்று வாரங்களுக்கு மருத்துவமனை அவசர சிகிழ்ச்சியிலிருந்த அவர் டிசம்பர் 17ஆம் தேதி மரணமடைந்தார்.
“இரண்டுக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள்” அடிப் (வயது 24) என்பவரைக் கொன்றதாக 2019 செப்டம்பரில் கரோனர் நீதிமன்ற அமர்வில் ரோஃபியா முகமட் தீர்ப்பளித்தார்,
அடிப்பின் மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்த அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் விசாரணை அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சைபுல்லாவைத் தவிர, குற்றம் சாட்டப்பட்ட மற்ற 16 நபர்கள் – முகமது ரிதுவான் சேக் ருஸ்லான், இர்வான் நூர்தீன், முகமது கைரி அப்துல் ரஷீத், ரோசைஹான் ஜகாரியா, முகம்மது கையூம் முகமது பைசல், முகமது அஷ்ரப் முகமது பைசல், அப்சல் ஈஸ்ட்ரி அப்துல்லா, மொஹமட் ஜலீல் தலிப், அநுர் முஹம்மத் தாலிப் ஷுக்ரி ரஸாலி, நோர் அஸ்மி அப்துல் கானி, மொஹமட் ஷஹரில் டேனியல் சஜீல், முகம்மது ஹஸ்னீசம் ஷா சம்சுதீன், அக்மல் இஸாத் அஸி மற்றும் மொஹமட் நோருல் இஸ்மாவி இஸ்லாஹுதீன் ஆகியோர் அடங்கும்.
23 முதல் 46 வயதுடைய இவர்கள், நவம்பர் 26ஆம் தேதி அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை கலவரத்தில் ஈடுபட்டதாகவும், ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 148 இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அடுத்தமாதம், மார்ச் 14 முதல் நான்கு நாட்களுக்கு விசாரணை மீண்டும் தொடரும். மேலும் 10 நபர்கள் சாட்சியளிப்பார்கள் என்று துணை அரசு வழக்கறிஞர் முகமது வாஃபி ஹுசைன், மாஜிஸ்திரேட் முகமது இஸ்கந்தர் ஜைனோலிடம் அறிவித்தார்.
(நன்றி-FMT)