இராகவன் கருப்பையா – இன்னும் சுமார் 2 வாரங்களில் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தல் மலேசிய அரசியல் வரலாற்றில் ஓர் அனல் பறக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு இந்த ஜொகூர் தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் அது ஈர்த்துள்ளதில் வியப்பில்லை.
அதாவது ஜொகூரை பாரிசான் கைப்பற்றினால் அடுத்த சில மாதங்களிலேயே பொதுத் தேர்தலை நடத்தும்படி பிரதமர் சப்ரிக்கு அம்னோ நெருக்குதல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெருக்குதல் கொடுக்கும் என்பதைவிட உத்தரவிடும் என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் சப்ரியின் சிண்டு அம்னோவின் கையில்தான் உள்ளது.
ஆக மலாக்காவில் கிடைத்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து இதெல்லாமே அம்னோ முடுக்கிவிட்ட சித்து விளையாட்டுதான் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால் தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்குவதற்கு முன்பே நாட்டின் மூத்தத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் சேற்றை வாரி இறைப்பதைப் போல மலேசிய அரசியலை அடி மட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளதுதான்.
கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் தவளைகளினால் சீர்குலைந்துள்ள நாடு இப்போது வலுக்கட்டாயமாகச் சாக்கடைக்குள் இழுத்துத் தள்ளப்படுவதைப் போல இருக்கிறது இவர்களுடையப் போக்கு.
கடந்த சில வாரங்களுக்கு முன் கடுமையான இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மகாதீர் தக்க சமயத்தில் குணமாகி தனது புதியக் கட்சியான பெஜூவாங்ஙை களமிறக்கியுள்ளார்.
மலாக்காவில் படுதோல்வியடைந்த முஹிடினின் பெரிக்காத்தான் கூட்டணி எப்படியாவது ஜொகூரை மீட்கவேண்டும் எனும் வேட்கையில் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதே சமயம் வலுவிழந்து கிடக்கும் பக்காத்தானுக்கு இது வாழ்வா சாவா எனும் போராட்டம் போல் தெரிகிறது.
பக்காத்தான் தலைவர் அன்வார் சற்று அமைதியாகத் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்து வரும் வேளையில் அம்னோ தலைவர்கள் அஹ்மாட் ஸாஹிட்டும் முன்னாள் பிரதமர் நஜிபும் மகாதீருடனும் முஹிடினுடனும் உக்கிரமான ற்போரில் இறங்கியுள்ளது நாட்டு மக்களுக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது.
நாடு இவ்வளவு மோசமானதற்கு காரணமானவர்கள் இப்போது சிறு பிள்ளைகளைப் போலக் கீழ்த்தரமான சர்ச்சையில் ஈடுபட்டுள்ளது மக்கள் அரசியல் மேல் உள்ள நாட்டத்தைச் ர்குலைத்து வருகிறது.
‘ஊழல்வாதிகளான நஜிபையும் ஸாஹிட்டையும் எப்படியாவது நிறுத்த வேண்டும்’ என மிகவும் ஆக்ரோஷமாகக் கோஷமிடும் மகாதீர், ஊழல் வழக்குகளை நிறுத்தக் கோரி அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
இதனால் சினமடைந்த நஜிப், மகாதீரின் பிள்ளைகளும் நெருங்கிய சகாக்களும் எப்படி சொத்துக்களைக் குவித்தனர் எனக் கிளறத் தொடங்கி விட்டார்.
‘ஊழல் வழக்குகளை நிறுத்தக் கோரி மகாதீரை நான் சந்திக்கவில்லை. என் மீது அவதூறு சுமத்தியதற்காக மகாதீர் ன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என ஸாஹிட் வாதிடுகிறார்.
அதே போல, தான் பிரதமராக இருந்த போது, தாங்கள் சிக்கியுள்ள ஊழல் வழக்குகளிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு ஸாஹிட்டும் நஜிபும் தன்னிடம் வந்து மன்றாடியதாக முஹிடின் றியது திரை மறைவுக்குப் பின்னால் அழுக்கு அரசியல் எப்படியெல்லாம் தாண்டவமாடுகிறது என்பதையே புலப்படுத்துகிறது.
ஜொகூர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் என் மீது வீண் பழிகள் சுமத்தப்படுகின்றன என்று சமாளிக்கும் ஸாஹிட், சமயச் சத்தியம் செய்ய முஹிடின் தயாரா என்று சவால் விடுகிறார்.
இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றால் அதற்கு நீண்ட நடைமுறை உள்ளது, எனவே முஹிடின் சமயச் சத்தியம் செய்ய வேண்டும் என்று அவர் கூறுவதும் வேடிக்கையாகத்தான் உள்ளது.
சமயச் சத்தியம் செய்து நிரபராதி என நிரூபிக்க முயல்வதும் அடுத்தவர் மீது குற்றம் சுமத்துவதும் காலத்திற்கு ஏற்ற நடவடிக்கைகளா என்பதும் வாதத்திற்குரிய ஒன்றுதான்.
தெருவில் சிறுவர்கள் சண்டையிட்டு கொள்வதைப் போல நடந்து கொள்ளும் இவர்களா நாட்டின் தலை விதியை மாற்றப் போகிறார்கள்?
நூறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் மகாதீர் ஏன் இன்னமும் அரசியலில் போராடிக் கொண்டிருக்கிறார் என்பது வெள்ளிடை மலை. நஜிப்பும் ஸாஹிட்டும் ஏன் நாட்டை மீண்டும் கைப்பற்றத் துடிக்கின்றனர் என்பதும் மக்களுக்குத் தெரியும்.
அரசியல் தவளைகளுக்குத் தலைமையேற்று கொல்லைப் புறமாக வந்து ஆட்சியைக் கைப்பற்றிய முஹிடினுக்கு மான அவமானப் பிரச்சினை.
எனவே சுயநலப் பின்னணியில் நாட்டை சாக்கடைக்குள் தள்ளவும் தயங்காத இவர்களுடையப் போராட்டமெல்லாம் இந்த வட்டத்திற்குள்தான் அடங்கியிருக்கிறது எனும் நிலையிலிருந்து மலேசியா மீட்சி பெறுமா?