கெடாவில் ஹூடுட் இல்லை என்ற கூற்றில் உண்மையில்லை, மசீச

கெடாவில் இப்போதைக்கு ஹூடுட் சட்டம் நடைமுறைக்கு வராது என்று பாஸ் கட்சி அறிவித்திருப்பதில் உண்மையில்லை; அது முஸ்லிம்-அல்லாதாரின் ஆதரவைப் பெறுவதற்காக சொல்லப்பட்டது என்கிறது அம்மாநில மசீச.

“கெடாவில் முஸ்லிம்-அல்லாத வாக்காளர் ஆதரவு இறங்குமுகமாகவுள்ளதைப் பிடித்து நிறுத்தும்  நோக்கத்துடன் அவ்வாறு அறிவித்திருக்கிறார்கள்”, என்று கெடா மசீச தலைவர் சோங் இட் சியு நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்

அம்மாநிலத்தில் “ஹூடுட் சாயல் கொண்ட நடவடிக்கைகள்”  கமுக்கமாக தலைநீட்டியிருக்கின்றன என்றும் “அவற்றை முஸ்லிம்-அல்லாதார் ஏற்கவில்லை” என்று தெரிந்ததும் அப்படி ஓர் அறிவிப்பைச் செய்திருக்கிறார்கள் என்றாரவர்,

சோங் சில எடுத்துக்காட்டுகளையும் குறிப்பிட்டார். புத்தாண்டு வரவேற்பு நிகழ்வின்போது ஆண்களையும் பெண்களையும் தனித்தனியே பிரித்து வைத்தது, கெடாவில் இருந்த ஒரே பன்றி அறுப்புக்கூடத்தை மாற்று இடம் கொடுக்காமலேயே உடைத்தெறிந்தது, முஸ்லிம்களின் தொழுகை  நேரங்களின்போது 15-நிமிடங்களுக்கு மூடிவைக்க மறுக்கும் கடைகளின் வணிக உரிமத்தை இரத்துச் செய்யப்போவதாக மருட்டுவது போன்றவற்றை அவர்  சுட்டிக்காட்டினார்.

கெடாவில் பாஸ் ஹூடுட் சட்டத்தை அமல்படுத்தாது என்று கிளந்தான் பாஸ் கட்சியின் தகவல் பிரிவின் துணைத் தலைவர் அஹ்மட் பாய்ஹாகி அடிகுல்லா கூறியதாக நேற்று மலேசியாகினியில் வெளியிடப்பட்டிருந்த செய்தி தொடர்பில் சோங் இவ்வாறு கருத்துரைத்தார்.

அந்த அறிவிப்பை “நம்புவதற்கில்லை” என்று கூறிய சோங், கடந்த வாரம் த சன் செய்தித்தாளில் கிளந்தான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகம்மட் அமர் அப்துல்லா “சரியான தருணத்தில்” கெடாவில் ஹூடுட் அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.