பொதுவாக மக்களை, குறிப்பாக வாக்காளர்களைக் குழப்புவதில், குழப்ப நிலையிலேயே வைத்திருப்பதில் அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் தயங்காது கையாளும் அரசியல் கலாச்சாரமாகும். அரசியல் வாழ்க்கையில் இந்தக் கலாச்சாரம் தவிர்க்கப்படாத மரபு என்று சொல்லலாம்.
அரசியல் கலாச்சாரம்
அரசியல் கலாச்சாரதெளிவற்ற முறையில் பேசுவது, காலத்துக்கு ஏற்றவாறு எதையாவது சொல்லிவிட்டு பிறகு அதை வேறுவிதமாக விமர்சிப்பது அரசியல்வாதிகளின் தனி சிறப்பு என்று கூட சொல்லலாம். இவர்களின் குழப்பும் செயல்களுக்கு ஆதரவாகத் திகழ்வது அவர்களை ஆதரிக்கும் தகவல் ஊடகங்கள். ஒரு அரசியல் கட்சியின் கையில், செல்வாக்கில், ஆதரவில் இயங்கும் தகவல் ஊடகம் அந்தக் கட்சியின் தலைவர்களுக்குத் தங்கு தடையின்றி ஆதரவு நல்குவது தங்களின் கடமையாகக் கருதுவார்கள்.
மேலே சொல்லப்பட்ட மக்களை, வாக்காளர்களைக் குழப்ப நிலையிலேயே வைத்திருப்பதற்கு, நவீன முறையைக் கையாளுவதற்காகப் புது வியூகங்களைத் தயாரிக்கும் விளம்பர நிறுவனங்களும் வந்துவிட்டன. தங்களை நியமிக்கும் அரசியல் கட்சியை, அதன் தலைவர்களை விளம்பரப்படுத்துவது, தலைவர்களின் அம்சங்களை மிகையாக வர்ணிப்பது, அரசியல்வாதியின் நடவடிக்கை சிறப்பாக இல்லாவிட்டாலும் அதைப் பெரிதுப்படுத்தி மக்களிடம் பரப்புவது, மக்களிடையே பேச வைப்பது, அரசியல் தலைவர்கள் போகும் இடத்தைப் பொருத்து, அதாவது பங்கு பெற போகும் நிகழ்ச்சியில் எப்படிப்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள்?
அவர்களின் விருப்பங்கள் என்ன? எதை எதிர்பார்க்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்? யாரை விரும்புகிறார்கள்? என்பன போன்ற கேள்விகள் பல கோணங்களில் இருந்து ஆய்வு நடத்தி, அந்த நிகழ்வுக்குத் தகுந்த உடை, முகப்பாவனை, எவர் பெயர்களைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்; சோகத்தில் இருப்பவர்களைச் சந்திக்கும்போது சோக முகப்பாவனை, உடையும் அதற்கு ஏற்றாற் போல் இருக்க வேண்டும். இவையாவும் இன்றைய பொது வாழ்வில் ஈடுபட துணிவும், நடிப்பாற்றலும் பெற்றிருக்க வேண்டிய அரசியல் வாழ்க்கை இலக்கணங்களாகும்.
அரசியல்வாதிகளை விளம்பரப்படுத்தும் நிறுவனங்களும் ஊழலும்
இந்த இலக்கணங்களைப் பெறுவதற்கு, பரப்புவதற்கு பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. புது பொருளை எவ்வாறு விளம்பரப்படுத்துகிறார்களோ அதுபோன்ற பணியே அரசியல்வாதிகளை விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள் முளைத்துவிட்டன. எல்லாம் பணத்தின் மகிமை. ஆமாம், அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சிகளுக்குப் பணத்தைப் பற்றிய கவலை இல்லை.
அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் கட்சிகள் இந்தப் பண விஷயத்தில் பின்தங்கியே இருப்பதும் கண்கூடு. இவை அதிகாரத்தைக் கைப்பற்றியதும் பண அரசியல் நாகரீகத்தைப் பின்பற்றாமல் இருப்பதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதே சமயத்தில், தங்கள் காரியம் கைகூட வேண்டும் என்ற பேராசையில் பணத்தை வாரி இறைக்க தயங்காதவர்களும் இருக்கிறார்கள். எனவே, அதிகாரத்தைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு பணத்தைச் செலவிடுவதில் ஊழல் மனம் கொண்ட அரசு – ஊழலில் மிதக்க முடியும் என்ற நம்பிக்கையில் தேர்தலில் குதிக்கும் கட்சி ஊழல் செய்ய ஒரு போதும் தயங்காது.
இப்படிப்பட்ட ஊழல் கட்சியை, தலைவர்களைத்தான் விளம்பர நிறுவனங்கள் மக்களைக் கவரும் வகையில் பிரச்சார வியூகங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் தோன்றின.
இந்த நிறுவனங்கள் அரசியல் கட்சிகளை, அரசியல் தலைவர்களை மட்டும் குறிவைத்து தங்களின் விளம்பர நிறுவன வியாபாரத்தை நடத்தவில்லை. பொது மக்களின் கவனத்தைக் கவர்ந்தவர்களும் அடங்குவர். உதாரணத்துக்கு, நடிகர்கள், பாடகர்கள், விளையாட்டாளர்கள், புகழ் கொண்டவர்கள் இந்த விளம்பர நிறுவனங்களின் குறியாகும். நாற்பதுகளில் ஃபிராங்க் சினட்ரா என்ற பாடகர் புகழின் உச்சியைக் கண்டிராத காலத்தில் அவர் பாடும் நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்டு அவர் பாட்டில் மயங்கி, கூச்சலிட்டு; சிலர் மேலாடைகளைக் கழற்றி சினட்ரா பாடி கொண்டிருக்கும் மேடை மீது வீசினர்.
பாட்டு இனிமையாக இருந்தாலும் அதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு ஆடி பாடி மகிழ்ந்து மேலாடைகளை அகற்றுவானேன்! இதுதான் வியாபார வியூகம். அவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு தங்களையே மறந்து நடந்து கொண்டவர்கள் பணத்தைக் குறிக்கோளாகக் கொண்ட கூலிப்படைகள். இந்தச் சினட்ரா நிகழ்வை, சினட்ரா பித்து என்று சொல்லப்படுவது உண்டு.
இது உலகெங்கும் பரவியது. இன்றும் அதன் மவுசு குறைந்ததாகத் தெரியவில்லை. அந்த முறைதான் சமீப காலத்தில் ஆசிய நாடுகளிலும் பரவியிருக்கிறது. குறிப்பாக ஜனநாயக முறையில் நம்பிக்கை கொண்ட நாடுகளிலும், கம்யூனிஸம் நாடுகளிலும், சமய அரசியல் நடத்தும் நாடுகளில் இந்த விளம்பர வியாபாரிகளின் பருப்பு வேகாது. ஒரு வகையில் இந்த விளம்பர வியாபார நிறுவனங்களும், அவற்றின் சேவையைப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்.
விளம்பர நிறுவனங்களுக்குப் பணத்தில் குறி, ஆட்சியைத் தற்காத்துக் கொள்வதே அரசியல் கட்சிகளின் குறி. இதில் ஏமாறுவது யார்? வாக்காளப் பெருமக்கள்! விளம்பர நிறுவனங்கள் பொய்யை மெய்யெனக் காட்டுவார்கள்; உண்மையைத் திரித்துக் கூறுவார்கள். எல்லாம் பணத்துக்காக.
ஊழல் சட்டம் பாய வேண்டும் அல்லவா?
இந்த நாட்டைக் கொடுமைப்படுத்துவது பகிரங்கமான ஊழல் நடவடிக்கைகள். அதைக் களைய துணிவார்களா அல்லது உதட்டளவோடு நின்றுவிடுமா? ஒரு உண்மை நிலவரத்தைக் கவனிப்போம். ஊழல் என்றால் சட்டத்துக்குப் புறம்பான செயலால் ஒருவருக்கு நன்மை கிடைக்கிறது என்றுதானே அர்த்தம். நான் அதிகாரத்தில் இருக்கும்போது என்னிடம் சிலர் வந்து உதவிகளைக் கேட்கின்றனர். நான் அவர்கள் கேட்கும் உதவியை நல்கினால்தான் என் பதவியை நீடிக்க முடியும். காரணம், நான் சார்ந்திருக்கும் கட்சியில் அவர்களுக்குப் பெருத்த செல்வாக்கு உண்டு.
அவர்கள் நினைத்தால் என்னைப் பதவியிலிருந்து தூக்கிவிட முடியும். அவர்களின் கோரிக்கைகளுக்கு நான் இணங்க செயல்படுவதானது என் பதவியைத் தற்காத்துக் கொள்ள தவறைச் செய்கிறேன். ஊழல் சட்டம் பாய வேண்டும் அல்லவா? இந்த நிகழ்வை ஊழல் தடுப்பு துறையில் புகார் செய்தால் குற்றம் சாட்ட சான்றுகள் இல்லை என்று சொன்னால் அவர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது?
இன்று வறிய நிலையில் வாழ்கிறோம் என்றால் யார் காரணம்?
பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், இப்பொழுது ஜொகூர் மாநிலத்தில் மாநிலத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அரசியல் விளம்பர நிறுவனங்களின் கைவரிசை பளிச்சிடும். தேர்தல் ஊழல் நடவடிக்கைகள் அதிகரிக்கும். ஊழல் தடுப்பு துறையின் நிலை என்ன என்பதை அலசிப்பார்ப்பதை விட மக்களே தெளிவுடன் இருக்க வேண்டும். கட்சிகளின் பொய் பிரச்சாரத்துக்கு இடமளிக்கக்கூடாது.
வாக்குறுதியைத் தருபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். முன்பு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றினார்களா? எல்லோரும் சமமே என்று தேர்தல் காலத்தில் முழங்குவோர் தேர்தலுக்குப் பிறகு அவர்கள் தந்த வாக்குறுதியை மதித்து நடந்து கொண்டார்களா? இந்தக் கேள்வியை ஒரு போதும் மறக்கக்கூடாது.
இப்பொழுது ஒவ்வொரு வாக்கு சீட்டுக்கும் பணம் தருவோர் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். பணத்தைக் கொடுத்து வாக்காளர்களின் ஜனநாயக உரிமையை அல்லவா பறிக்கிறார்கள்! இவையாவும் மக்களின் கவனத்தில் எப்பொழுதும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஜனநாயகத்துக்கும், வாக்குரிமைக்கும் அர்த்தம் உண்டு. இன்று வறிய நிலையில் வாழ்கிறோம் என்றால் யார் காரணம்?
ஒரு குறிப்பிட்ட தொகையைத் தந்து வாக்கை வாங்குவோர் வாக்காளர்களின் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கவில்லையே. அவர்களின் வெற்றியில் தானே குறி! பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்குவோர் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். மக்களை ஏமாற்றுவார்கள். போலி உணர்வுகளை விற்கும் அரசியல் வியாபாரிகள். பொதுவாக ஜனநாயகத்தில் பங்குபெறும் வாக்காளர்கள் இந்த உண்மைகளை உணர்ந்திருக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஜனநாயக கடமையாகும்.
ஜந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்போர் எதிர்காலச் சந்ததியினரின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்கள் என்பதையும் மறக்க வேண்டாம். நம் முன்னோர் நம்பி மோசம் போனார்கள். நம் சந்ததியினர் மோசம் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இன்றைய தலைமுறையின் கடமையாகும். இன்று நாட்டில் நிகழும் இக்கட்டான சூழ்நிலை, மக்களின் குழப்பம், அச்சம், கவலையைப் பிரதிபலிக்கும் எதிர்காலம் யாவும் நம்மைச் சிந்திக்கச் செய்கிறது.
சிந்திக்காமல், ஆக்ககரமான நடவடிக்கைகளில் இறங்காமல் வாளா இருந்தால் பாதிப்படைய போவது மக்களே. மலேசியாவில் நடப்பதை எல்லாம் கவனிக்கும்போது எல்லா இனத்தவரும், சமயத்தினரும் அச்ச நிலையில் சங்கடப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்றால் நாட்டின் நிலவரத்தை மிகைப்படுத்துவதாகக் கருதுவது ஆபத்தான போக்காகும்.
இந்த நிலையில் சிலாங்கூர் அரசுக்கு எதிராக இஸ்லாமிய சகோதரிகள் தொடுத்து வழங்கிய சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் குறுகிவிட்டது. கூட்டரசு நீதிமன்றம் தமது தீர்ப்பில் சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சட்டத்தின் 66A பிரிவு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த 22.2.2022ஆம் தேதி வருவதற்கு முன்னர் உயர்நீதிமன்றம் தனித்து வாழும் இந்து மதத்தைச் சேர்ந்த லோ சுவீ ஹொங் தமது மூன்று பிள்ளைகளைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்திருக்கிறது.
ஆபத்தான அணுகுமுறை
இவ்விரண்டு வழக்குகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. முஸ்லிம் இயக்கமான G25 நீதிமன்ற தீர்ப்பை மதிக்கும்படி வலியுறுத்துகிறது. பெரும்பான்மையினர் கூட சமய விவகாரங்களில் மனித நேயத்தை வலியுறுத்துவதைக் காண முடிகிறது. அதே சமயத்தில், இஸ்லாமிய கட்சியான பாஸ், ஷரியா நீதிமன்றங்கள் சமயச் சார்பற்ற நீதிமன்றங்களைப் போன்று ஷரியா நீதிமன்றம் மறு ஆய்வு அதிகாரத்தைப் பெற வேண்டுமெனக் கோரியிருப்பதோடு அரசமைப்புச் சட்டத்தில் இதற்கான திருத்தத்தைக் கொணர வேண்டும் என்கிறது.
இது ஆபத்தான அணுகுமுறை என்றே தோன்றுகிறது. அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மூன்றில் இரண்டு விகித நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை. எந்தக் அரசியல் கூட்டணியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது ஆபத்து. இதை மலாய் இனத்தவரும் உணர வேண்டும். இது நிறைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும். துன் டாக்டர் மகாதீர் முகம்மது பிரதமராக இருந்த காலகட்டத்தில், அரசமைப்புச் சட்டத்தின் 121ஆம் பிரிவில் திருத்தம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட சட்டச் சிக்கல் சுமார் முப்பது ஆண்டுகள் நீடித்ததை மக்கள் மறக்கக்கூடாது.
இந்திரா காந்திக்கு இன்று வரை தம் மகளைப் பார்க்க முடியாத அவலத்தை மலேசியர்களாக மக்கள் நினைத்துப் பார்க்கும் நிலை வரவேண்டும்.