எதிர்வரும் மார்ச் 12-ம் தேதி நடைபெறவுள்ள 15-வது ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.) மலேசிய மக்கள் கட்சிக்கு (பி.ஆர்.எம்.) உடன்பாடில்லை என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் கோ சுவி யோங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜொகூர் சட்டமன்றத்தைக் கலைக்க நியாயமான காரணங்கள் ஏதுமில்லை. மக்களின் வரி பணமான அரசாங்க நிதியை விரயமாக்கும் நடவடிக்கை இது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இது மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல், பி.ஆர்.என்.னுக்காக செலவளிக்கப்படும் பணத்தை, கடந்த 2 ஆண்டுகளாக கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும்.”
“இந்தப் பி.ஆர்.என்.னில் நாங்கள் போட்டியிட விரும்பவில்லை. ஜொகூர் வாக்காளர்கள் புத்திசாலிதனமாக வாக்களிக்க வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.
பி.எஸ்.எம். வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
கோத்தா இஸ்கண்டார் தொகுதியில் போட்டியிடும் பி.எஸ்.எம். வேட்பாளருக்கு வாக்களிக்குமாறும் பி.ஆர்.எம். ஜொகூர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
“பி.எஸ்.எம். வேட்பாளர் அரங்கண்ணல் இராஜு, சுயநலப் போக்கற்றவர், பாட்டாளி மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவர். எனவே, ஜொகூர் வாக்காளர்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்,” எனக் கோ கேட்டுக்கொண்டார்.
ஊழல் மற்றும் அதிகார அத்துமீறலுக்குப் பேர்போன அம்னோ, தனது அரசியல், சுய நலனுக்காகவும், சட்ட சிக்கல்களில் இருந்து தப்பிக்கவும் ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்துள்ளது என்றார் அவர்.
“நாட்டின் ஜனநாயகம் அம்னோவால் தவறாகக் கையாளப்படுகிறது. கடந்த 60 ஆண்டுகள் அம்னோ-பாரிசான் ஆட்சியின் கீழ், நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது,” என்றும் கோ சொன்னார்.
“பொருளாதாரச் சரிவு, நிலையற்ற அரசியல் சூழல், சமூகப் பொருளாதாரக் கல்வி பிரச்சனைகள் மற்றும் குற்றச் செயல்களின் அதிகரிப்பு போன்றவைக்கு அம்னோ-பாரிசானின் 60 ஆண்டுகால ஆட்சியேக் காரணம்.
“எனவே, கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் அம்னோ பாரிசானைப் புறக்கணித்ததுபோல், இந்தப் பி.ஆர்.என்.னில் ஜொகூர் வாக்காளர்கள் அந்தக் கூட்டணியைப் புறக்கணிக்க வேண்டும்,” என அவர் அந்த அறிக்கை வாயிலாகக் கேட்டுக்கொண்டார்.