உக்ரைன்-ரஷியா போர் எதிரொலி: 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்

புடாபெஸ்ட்:

உக்ரைன் மீது ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷிய தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

போர் பீதியால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐநா சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.

போர் தீவிரமடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து வெளியேறுவோர், போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும்  மால்டோவா ஆகிய நாடுகளில் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக போலந்து நாட்டு எல்லையில்  2,81,000,பேர் குவிந்துள்ளனர்.

அந்த பகுதியில் நீண்ட வரிசையில் கார்கள் மற்றும் பேருந்துகள் அணிவகுத்து நிற்கின்றன. பலர் நடந்தே எல்லைகளை கடந்து வருகின்றனர்.

எல்லைகளை கடப்பதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், உறைபனியில் இருந்து பாதுகாத்து கொள்ள குளிர்கால கோட்டு அணிந்தும்,  சிறிய சூட்கேஸ்களை எடுத்துக்கொண்டு ரயில்வே ஸ்டேஷனில் ஆயிரக் கணக்கானோர்  காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Malaimalar