எங்களுடைய இலக்கை அடையும்வரை போர் தொடரும்- ரஷ்யா உறுதி

ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி செய்துவந்தது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உக்ரைன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதனையடுத்து, உக்ரைன் நாட்டைச் சுற்றி ராணுவத்தை நிறுத்தியது ரஷ்யா. அதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதல் தொடர்ந்தது. இது உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாகியது. அதனையடுத்து, ரஷ்யாவின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத்தடை விதித்து வருகின்றன.

ரஷ்யாவின் செயல்பாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்துவருகிறது. இந்த போரின் காரணமாக உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா இந்த பயங்கரமான தாக்குதலின் காரணமாக இதுவரையில், 5,000 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள் ஆவர். பொதுமக்களுக்கு 3,00-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ரஷ்யா நாட்டுத் தரப்பிலும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைன் மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தநிலையில், போர் குறித்து பேசிய ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷோய்கு, ‘மேற்குலக நாடுகளால் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்திலிருந்து எங்களைப் பாதுகாக்க தான் எங்களுடைய இலக்கு. உக்ரைன் நாட்டின் பகுதியை ஆக்கிரமிப்பது எங்களுடைய இலக்கு அல்ல. எங்களுடைய இலக்கை அடையும் வரை போர் தொடரும். போரிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கு இடமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

News18