இராகவன் கருப்பையா – பல்லினங்களையும் சமயங்களையும் கொண்ட நம் நாட்டில் மதமாற்றம் என்பது நீண்டகால, விவாதத்திற்குரிய, தீர்க்கப்படாத ஒரு விவகாரமாகவே இருந்து வருகிறது.
குறிப்பாகச் சிறார்கள், பெற்றோர் இருவருடைய ஒப்புதலின்றி ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படுவது தொடர்ந்தார்போல் ஒரு நீண்டகாலச் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
பதினெட்டு வயதிற்கும் குறைவான பிள்ளைகளை மத மாற்றம் செய்வதற்குப் பெற்றோர் இருவரின் ஒப்புதலும் தேவை எனக் கடந்த 2018ஆம் ஆண்டில் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும் சில மாநிலங்களின் சட்ட விதிகள் அதற்கு மாறுபட்டுள்ளன.
இந்த முரண்பாட்டைச் சம்பந்தப்பட்ட ஒரு சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஒருதலைப்பட்ச மத மாற்றத்திற்கு உரமூட்டி வருவதோடு தங்களிடம் மாட்டிக் கொள்ளும் பலவீனமான தரப்பினரை மிகச் சுலபத்தில் மத மாற்றம் செய்துவிடுகின்றனர்.
இப்படிப்பட்ட அடாவடிச் செயல்களினால் ஒன்றுமறியாச் சிறுவர்களின் ஆயுள் முழுவதும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்களா என்று தெரியவில்லை.
திருமணத் தேவைகளுக்காகச் சுயமாக முடிவெடுத்து மதம் மாறும் இளையோரின் போக்கை அவர்கள் வழியே விட்டு விடுவதே சிறப்பு. நல்லதோ கெட்டதோ எவ்விதமான விளைவுகளாக இருந்தாலும் அவர்கள்தான் அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மத மாற்றத்திற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் சில வேளைகளில் சமுதாயமும் பெரும்பாலான சமயங்களில் பொறுப்பற்ற பெற்றோர்களுமே காரணகர்த்தாக்களாக இருப்பது தெரியவருகிறது.
அண்மையில் நாட்டு மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தனித்து வாழும் தாயான லோ சியூ ஹோங்ஙின் விவகாரமும் நீதி கிடைத்தும் நிம்மதியின்றி இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திரா காந்தியின் போராட்டமும் இக்கூற்றுக்கு நல்ல உதாரணங்களாகும்.
நம் நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லங்கள் நிறையவே உள்ளன. அப்படிப்பட்ட இல்லங்களில் நம் இனப் பிள்ளைகள் நிறைந்து வழிவது மிகவும் வேதனையான விசயம்.
அரசு சாரா இயக்கங்கள் போன்ற தனிப்பட்ட அமைப்புகள் ஒரு புறமிருக்க நாடளாவிய நிலையில் தேவாலயங்களின் கண்காணிப்பில் அதிக அளவிலான இதுபோன்ற இல்லங்கள் உள்ளன.
தனித்து வாழும் தாய்மார்களும் கடுமையான வறுமையில் வாடும் பெற்றோர்களும் இத்தகைய இல்லங்களில் தங்களுடைய பிள்ளைகளைச் சேர்க்கின்றனர்.
அதற்கு மேற்கொண்டு போதைப் பித்தர் மறுவாழ்வு மையங்களில் உள்ளவர்கள் மற்றும் பலதரப்பட்ட குற்றச் செயல்களுக்காகச் சிறைச் சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களின் பிள்ளைகள் நிறையப் பேர் இத்தகைய ஆதரவற்ற இல்லங்களில் வளர்கின்றனர்.
இவ்வாறான சோகங்களில் உழலும் பிள்ளைகளை அரவணைத்து அவர்களுக்கு அரணாக இருந்து வாழ்வளிக்கும் தேவாலயங்கனின் கண்காணிப்பில் இயங்கும் இல்லங்கள் ஆற்றும் சேவைகள் அளப்பரியது.
ஆனால் அப்படிப்பட்ட இல்லங்களில் வளரும் பிள்ளைகள் கிறிஸ்துவப் போதனைகளுக்கு உள்பட்டுத்தான் வளர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் தேவாலயங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஞானஸ்நானம் அல்லது மத மாற்றம் செய்யப்படாவிட்டாலும், வளர்வது என்னவோ கிறிஸ்துவ முறைப்படிதான்.
அவர்கள் மீது கிறிஸ்துவ மதம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதில்லை. ஆனால் பெரியவர்கள் ஆனதும் அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றுவார்கள்? தங்களைப் பெற்றெடுத்து உதாசீனப்படுத்தியவர்களின் மதமா வளர்த்தெடுத்தவர்களின் மதமா?
இத்தகைய அவல நிலைக்குப் பொறுப்பற்ற பெற்றோர்களும் அவர்கள் ஏற்படுத்திய சூழ்நிலைகளும்தானே காரணம்!
இதற்கிடையே ஆதரவற்ற நிலையில் உள்ள தனித்து வாழும் தாய்மார்கள் தங்களின் பாதுகாப்பு காரணமாகக் கிறிஸ்துவ மதத்தையோ இஸ்லாத்தையோ தழுவி உதவிகளைப் பெறுவதே மேல் என்று எண்ணும் யதார்த்த உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இத்தகைய சூழ்நிலைக்கு ஒரு வகையில் சமுதாயமும் காரணமாக அமைகிறது.