உக்ரைனின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீது ரஷிய படைகள் தாக்குதல் – கதிர் வீச்சு அபாயம்

எனர்ஹோடர்:

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல்  9-வது நாளாக நீடிக்கும் நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷிய படைகள் நேரடியாக தாக்குதல் நடத்தின.

அணுமின் நிலையம் மீது  குண்டுகள் விழுந்ததாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துளளார். அந்த அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளில் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக அவர் தெரிவித்தார்.

அந்த அணு உலை புதுப்பிக்கப்பட்டு இயங்கவில்லை என்றாலும் அதன் உள்ளே அணு எரிபொருள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் கடும் புகைமூட்டம் காணப்பட்ட நிலையில் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன.

உக்ரைன் நாட்டிற்கு 25 சதவீத மின் விநியோகத்தை வழங்கும் சபோரோஷியா,  ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமாக கருதப்படுகிறது. அணுமின் நிலையத்தின் அருகே கதிர்வீச்சு கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சபோரோஷியா  வெடித்தால் அது செர்னோபில் அணுஉலை பாதிப்பை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று, உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா எச்சரித்துள்ளார்.

சபோரோஷியா அணுஉலை நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து அறிய உக்ரேனிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருவதாக சர்வதேச அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது.

Malaimalar