பெல்டா டிஜி-க்கு எதிராக பெர்காசா தலைமையில் 1,000 பேர் ஆர்ப்பாட்டம்

மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா, இன்று சுமார் ஆயிரம் பேருக்குத் தலைமையேற்று கூட்டரசு நில மேம்பாட்டு நிர்வாகத்தின் (பெல்டா) தலைமை இயக்குனர் சுல்கிப்ளி வகாப்புக்கு  எதிராக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது.

பெல்டாவுக்குள் விசாரணை நடத்தி அதில் உள்ள “துரோகிகளை”க் களையெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.  “துரோகிகளில்”  சுல்கிப்ளியும் ஒருவர் என அவர்கள் குறிப்பிட்டனர்.

சுல்கிப்ளி, பெல்டாவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேற்கொள்ள நினைத்த “சீரமைப்பு முயற்சிகளுக்கு” தடையாக இருந்தார் என்பதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெர்காசா துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் அபு பக்கார் கூறினார்.

பெல்டா தலைவர் ஈசா சமட்டுக்கும் நஜிப்புக்குமிடையில் இரகசியமாக நடைபெற்ற கடிதப் போக்குவரத்துகள் பற்றி வெளியில் தகவல் தெரிவித்தவர் சுல்கிப்ளிதான் என்று அப்துல் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பகல் மணி 12.30 அளவில் கோலாலம்பூர் ஜாலான் செமாராக்கில், விஸ்மா பெல்டாவுக்கு 500 மீட்டர் தொலைவில் ஒன்றுதிரண்டனர். அவர்கள் பாஸ் கட்சியுடன் தொடர்புகொண்ட அனாக் அமைப்பைக் கண்டிக்கும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

பெல்டா குடியேற்றக்காரர்களைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொள்ளும் அனாக், பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் பெர்ஹாட் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. சுல்கிப்ளியும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. 

இதன் காரணமாக சுல்கிப்ளி நவம்பர் 25-இலிருந்து விடுப்பில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பெல்டா குடியேறிகள், பெர்காசா மற்றும் அம்னோ உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.