‘அதிகாலை தாக்குதல்’ விடியாத மக்களாகத் தோட்டத்தொழிலாளர்கள்    

இந்த ஆய்வுக்கட்டுரை, சிவசந்திரலிங்கம் சுந்தர ராஜா பல்கலைக்கழக மலாயாவின்  வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியராக இருந்த போது வெளியிடப்பட்டது.

செப்டம்பர் 7, 1981, ஆகஸ்ட் 31, 1957க்குப் பிறகு மலேசிய வரலாற்றில் மிக முக்கியமான தேதிகளில் ஒன்றாக இருப்பது பலருக்குத் தெரியாது.

அப்போது,  பிரதமராக இரண்டு மாதங்கள் மட்டுமே பதவியிலிருந்த டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான மலேசிய அரசாங்கம் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் சில இறுதிச் சுவடுகளை, நாட்டின் முகத்திலிருந்து அகற்றுவதற்கான ஒரு சதித்திட்டத்தை நிறைவேற்றியது.

மலேசியாவின் மிகப்பெரிய பிரிட்டிஷ் ரப்பர் மற்றும் செம்பனை எண்ணெய்  நிறுவனங்களில் ஒன்றான கத்ரி கார்ப்பரேஷன் லிமிடெட்டின் பங்கு மூலதனத்தில் 50.41 சதவீதத்தை  லண்டன் பங்குச் சந்தையில் பெர்மோடலன் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) மூலம் அரசாங்கம் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த முழு நடவடிக்கையும் அதிகாலை சில மணி நேரங்களில் முடிக்கப்பட்டது. அதனால், இது ‘அதிகாலை தாக்குதல்’ (Dawn Raid) என்று அழைக்கப்படுகிறது.

இந்த தாக்குதல், இதுவரை கண்டிராத அளவில் அரசியல் ரீதியாகப் பெற்ற மறுக்க முடியாத வெற்றியாகும். மலேசிய அரசாங்கம் ஒரு “காலனித்துவ”  நிறுவனத்தைக் கையகப்படுத்தியது காலனித்துவ பொருளாதாரக் கொள்கையின் ஆற்றல்களைக் குறைத்த ஒரு வெற்றிகரமான நிகழ்வாகவும் பாராட்டப்பட்டது.

பல நூற்றாண்டு காலனித்துவத்திற்குப் பிறகு, சுதந்திர மலேசியா (அப்போது, ​​மலாயா) கட்டுப்படுத்தப்பட்ட காலனித்துவ பொருளாதாரத்திற்குத் தீர்வு காண முற்பட்டது. பிரிட்டிஷ் காலத்தில் தோட்டம் மற்றும் சுரங்க நிறுவனங்கள் முக்கிய பொருளாதார நகர்வுகளாக லண்டன் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டும் இயக்கப்பட்டும் வந்தன.

1970 இல் தொடங்கப்பட்ட, புதிய பொருளாதாரக் கொள்கையானது வெளிநாட்டுக்குச் சொந்தமான தோட்டம் மற்றும் சுரங்க நிறுவனங்களின் உரிமங்களை  தேசியமயமாக்கத் தொடங்கியது. பெருநிறுவன பங்குகளின் உரிமையை மறுசீரமைப்பது ஒரு முக்கிய கொள்கை நோக்கமாக இருந்தது.

இதற்காக, மலேசிய அரசாங்கம் 1979ல் அப்போதைய துணைப் பிரதமராக இருந்த மகாதீரின்  கீழ் PNBயை நிறுவியது.

தனியார்த் துறையில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட பங்குகளையும், மற்ற அரசு நிறுவனங்களின் நம்பிக்கையில் வைத்திருக்கும் பங்குகளையும் வாங்குவதற்கான திட்டங்கள் நிறுவப்பட்டன. பிஎன்பி கத்ரியில் அதிக அளவில் முதலீடு செய்தது.

மகாதீர் நாட்டின் நான்காவது பிரதமராக பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது முக்கியமாக இஸ்மாயில் மற்றும் அப்போதைய PNB தலைமை முதலீட்டு அதிகாரி அப்துல் காலித் இப்ராஹிம்  ஆகியோரால் வழிநடத்தப்பட்டது. இதன் வழி  ரப்பர், எண்ணெய் பனை மற்றும் கோகோ போன்ற தோட்டத் தொழில்களிலிருந்த கத்ரி கார்ப்பரேஷனின் சொத்துக்களை PNB கையகப்படுத்தியது.

1982 இல் லண்டன் பங்குச் சந்தையில் கத்ரியை விட அதிகமாக மதிப்பிடப்பட்ட  ஹாரிசன்ஸ் & கிராஸ்ஃபீல்டில் உள்ள 58 சதவீத உரிமையை PNB வாங்கியது. இறுதியில் 82,000 ஹெக்டேர் தோட்ட ரப்பர், எண்ணெய் பனை, கோகோ மற்றும் தேங்காய்களை வைத்திருந்தது மற்றும் 18,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியது.

மாபெரும் சாதனை

இது ஒரு பெரிய சாதனையாக இருந்தது, குறிப்பாகப் புதிதாகக் காலனித்துவம் நீக்கப்பட்ட, தொழில் மயமாகி வரும் தேசம், ‘புதிய-காலனித்துவ வாதிகளிடம்’ இருந்து தனது பொருளாதாரப் பங்குகளை மீட்பதற்கு மிகவும் தந்திரமாகவும் திருட்டுத்தனமாகவும் சூழ்ச்சி செய்தது மலேசியா.

ஆனால், இந்த பெருமைக்குப் பின்னால், பாதிக்கப்பட்ட ஊழியர்களின் மற்றொரு சோகமும் உள்ளது.  அதாவது தினக்கூலிகளாக வாழ்ந்த  தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள். இவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

தோட்டமக்களும் துண்டாடலும் 

சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், தோட்டங்களில் வாழ்ந்த  சமூகம் ஏற்கனவே பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டனர். 1950கள் மற்றும் 1960களில், தோட்டத் துண்டாடல் பிரச்சனை இருந்தது, இதன் விளைவாக ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தோட்டங்களில் இருக்க முடிவு செய்தவர்கள் குறைக்கப்பட்ட ஊதியத்தை ஏற்க வேண்டியிருந்தது.

மற்றொரு பிரச்சினை 1969 இல் அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியது. அரசாங்கத்தின் வேலை அனுமதி கொள்கையின்படி, மலேசியர்கள் அல்லாத குடிமக்கள் வேலை செய்ய வேண்டுமானால் வேலை அனுமதிகளை பெற வேண்டும். மேலும், பல இந்தியத் தொழிலாளர்கள் மலாயாவில் பிறந்திருந்தாலும்.அக்கறையின்மை அல்லது அறியாமை காரணமாகக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை.

இதன் விளைவாக, அவர்களில் ஏறக்குறைய 60,000 பேர் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதே நேரத்தில் 50,000 க்கும் அதிகமானோர் தோட்டங்களில் தங்கியிருந்தனர். மற்றும் நிச்சயமற்ற தன்மையால் தங்கள் ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால் அவர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும் பயந்தனர்.

மே 13 கலவரத்திற்குப் பிறகு, இந்தியத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமான சமூகமாக உருவாக்கப்பட்டனர்.  மலேசிய மக்கள்தொகையில் 8% -க்கு குறைந்தனர். சுருக்கமாக, 1980-களில் கூட, இந்த தொழிலாளர்களின் சமூக பொருளாதார வளர்ச்சி சூணியமாக்த்தான் இருந்தது.

இவற்றுக்கு நடுவே, எறியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், அவர்களின் பொருளாதாரக் காயங்களில் மேலும் ஆழமானது.

வெளிநாட்டிற்குச் சொந்தமான தோட்டங்களை PNB கையகப்படுத்தியதன் மூலம், சிறந்த ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் போன்றவை வழி இந்தியர்களுக்கு ஒரு வழி பிறக்கும் என்று எதிர்பார்த்தனர். எஸ்டேட் தொழிலாளர்கள் உரிமை மற்றும் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டால், அனைத்து மலேசியர்களாக இருந்த புதிய அதிகாரிகள், அதிக இரக்கமுள்ளவர்களாக இருப்பார்கள் என்று நம்பினர்.

பழம் நழுவி மண்ணில் விழுந்தது 

ஆனால்,  புதிய நிர்வாகம் லாபத்தை அதிகரிப்பது மற்றும் குறைந்த ஊதியத்தை வைத்திருப்பது பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தது. அவர்கள் இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தத் தொடங்கினர்.

தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர் பற்றாக்குறை பற்றி புகார் தெரிவித்ததால், அரசாங்கம் அதிக எண்ணிக்கையிலான  இந்தோனேசியத் தொழிலாளர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதில் மெத்தனமாக இருந்தது. 1980 வாக்கில், மொத்த 167,000 தோட்டத் தொழிலாளர்களில் 20,000 முதல் 30,000 பேர் வரை இருந்தனர்.

தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் அதிகாரத்துடன் நடத்தப்பட்டனர். வலுவான சுதந்திர உணர்வை வெளிப்படுத்திய தொழிலாளர்களுக்கு மலேசிய மேலாளர்கள் அபராதம் விதித்ததாகச் செய்திகள் வந்துள்ளன. தொழிலாளர்கள் தங்கள் பணி நிலைமைகள் குறித்து ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க அனுமதிக்கப்படவில்லை.

சுங்கைப்பேட்டையில் உ ள்ள ஒரு தோட்டத்தைச் சேர்ந்த ரப்பர் தொழிலாளி ஒருவர் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு (தமிழ்நேசன்) அளித்த பேட்டி, அவரது புகைப்படத்துடன் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, அந்த ஊழியரை நிர்வாகம் மூன்று நாட்களுக்கு இடைநீக்கம் செய்தது. அந்த தொழிலாளி ஓய்வு பெற்ற பிறகு அவரது மகன் வேலைக்கு விண்ணப்பித்தபோது, ​​மற்றவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரை வேலைக்கு எடுக்க எஸ்டேட் நிருவாகம் மறுத்தது.

ஜோகூர், குலுவாங்கில் உள்ள எண்ணெய் பனை தோட்டத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து ஒரு தொழிலாளி மேலாளரிடம் வாக்குவாதம் செய்தார். இதன் விளைவு 24 மணி நேர அறிவிப்புடன் தொழிலாளி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தோட்டத் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தனர் 

எஸ்டேட் நிர்வாகம் மேம்பாட்டாளர்களுக்கு நிலத்தை விற்று, தொழிலாளர்களை இடமாற்றம் செய்வதன் மூலம் மில்லியன் கணக்காக லாபம் ஈட்டினர்,. மலேசியாவின் பெருமைமிக்க நிர்வாக மையமான புத்ராஜெயாவின் கட்டுமானத்தின் போது,​​எஸ்டேட் தொழிலாளர்களுக்கு இழப்பீடு அல்லது இடமாற்றம் எதுவும் கிடைக்காமல் பணிநீக்க அறிவிப்புகள் வழங்கப்பட்டன. தொழிலாளர்கள்  அதிருப்தி அடைந்தனர், இதன் விளைவாக, அவர்கள் பிரச்சனை செய்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர்.

இறுதியாக, அவர்களுக்கு குறைந்த விலையில் வீடுகள், ஒரு கோவில், டெங்கில் அருகே ஒரு தமிழ்ப்பள்ளி ஆகியவை உறுதியளிக்கப்பட்டன. உண்மையில், அவர்களுக்கு மூன்று முதல் நான்கு ஏக்கர் (1.2 முதல் 1.6 ஹெக்டேர்) நிலத்தில் 400 குடியிருப்புகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

கத்ரி-க்கு  சொந்தமான தோட்ட நிலங்களில் (முன்னர் ஹைலேண்ட்ஸ் மற்றும் லோலேண்ட்ஸுக்கு சொந்தமானது) வசிக்கும் ரப்பர் டேப்பர்கள்  1980 களில் PNB ஆல் சொத்துக்கள் வாங்கப்பட்ட பின்னர் 1990 களின் முற்பகுதியில், தொழிலாளர்களுக்கான அடிப்படை சமூக பொருளாதார தேவைகள் மறுக்கப்பட்டன.

கேவலமான பணி நீக்கம்

பல தலைமுறைகளாகத் தோட்டத் தொழிலில் இரப்பர் மரம் வெட்டுபவர்களாகவும், செம்பணை மரம் தோட்டங்களில்  அறுவடை செய்பவர்களாகவும் பணியாற்றிய சுமார் 150 குடும்பங்கள், தோட்டம் மேம்பாட்டுக்காக மாற்றியதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இரு தோட்டங்களிலிருந்த தொழிலாளர்கள் குடியிருப்புகளை காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டனர்.

1997 இல், நிர்வாகம் இழப்பீடு வழங்காமல் பணிநீக்கம் செய்வதைத் தடைசெய்யும் வகையில் சட்டங்களை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் இவை எதுவும் பலனளிக்கவில்லை.

அதிகாலை தாக்குதல் விடியாத மக்களாகத் தொழிலாளர்கள்

மலேசியாவுக்கு விடியலில் கிடைத்த மாபெரும் அரசியல் பொருளாதார வெற்றி தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில்  இழப்பையே மையப்படுத்தியது. நீண்ட காலமாக இந்தியத் தொழிலாளர்கள் தோட்டங்களையே நம்பி வாழ்ந்தவர்கள் என்ற உண்மையை அது கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

மலேசியர்கள் நிர்வாகத்தின் கீழ்,  அவர்களின் போக்கு காலனித்துவ அதிகாரிகளை விட மிகவும் மோசமாக இருந்தது எனலாம்.

அந்நிய தொழிலாளர்களின் வழி உழைப்பு என்பது உற்பத்தியின் அடிப்படையில் விற்பனைக்கும் குத்தகைக்கும் விடப்பட்டது. குறைந்த ஊதிய கொள்கையின் கீழ்,  இந்தியச் சமூகம் சின்னபின்னம் ஆக்கப்பட்டு தோட்டத்தை விட்டு வெளியேறப்பட்டனர்.

தன்னிச்சையான போராட்டங்களுக்கு மக்கள் தள்ளப்பட்டனர். ஆனால், அரசாங்கம் அதன் கடமையை முதலாளிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சாதகமான முறையில்தான் செயலாற்றியது.

தோட்டங்களை விற்கும் போது, ​​தோட்ட முதலாளிகளுக்கு பணிநீக்கம் இழப்பீடாக வழங்கப்பட்ட தொகை, விற்பனையின் மூலம் கிடைத்த பெரும் லாபத்துடன் ஒப்பிடுகையில் அற்பமானதாகும். தோட்டங்களை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள், நாட்டின் புறம்போக்குகளிலும், மலிவு வீடுகளிலும் தற்போது வாழ்ந்து கொண்டு நாட்டின் ஒரு பின் தங்கிய சமூகமாக வாழ்கின்றனர்.

பலர் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்து தங்கள் வாழ்க்கையைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், சொந்த வீடுகள் இல்லாமல், மோசமான அடிப்படை வாழ்க்கைச் சூழ்நிலையில் வாழ்கின்றனர். இளைய தலைமுறையினரில் ஒரு சாரார் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இழுக்கப்பட்டதால் அவர்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

‘அதிகாலை தாக்குதல்’ ஓர் அரசியல் வெற்றி, தேசியப் பெருமையும்கூட, ஆனால் அது ஒரு சமூகப் பொறுப்பற்ற, உழைப்பவர்களுக்குத் துரோகமானதாகவும் அமைந்திருப்பது ஒரு வரலாற்றுத்தவறாகும்.


சிவசந்திரலிங்கம் சுந்தர ராஜா பல்கலைக்கழக மலாயாவின் வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார். அவர் மலேசியப் பொருளாதார வரலாற்றுத் துறையில் நன்கு அறியப்பட்ட அறிஞர் ஆவார், பல உள்ளூர் மற்றும் சர்வதேச ஆராய்ச்சி கட்டிரைகளையும் வெளியிட்டுள்ளார்.

இதன் மொழிபெயர்புக்கு கட்டுரை ஆசிரியர் பொறுப்பல்ல.