உக்ரைன் தலைநகரில் போர் செய்தி சேகரிக்க சென்ற பெண் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 20வது நாளாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில்  தனியார் செய்தி நிறுவனத்தின்  பெண் செய்தியாளர் சாஷா என்று அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரா  குவ்ஷினோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி ஆகியோர் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உயிரிழந்துள்ளனர்.

போர் செய்தி சேகரிப்புக்காக அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர்களது வாகனம்  போர் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். அவர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த  இங்கிலாந்தை சேர்ந்த பெஞ்சமின் ஹால் என்ற நிருபர் உக்ரைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஆவணப்படத் தயாரிப்பாளரான ப்ரென்ட் ரெனாட், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

இதனிடையே, உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 97 குழந்தைகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து சுமார் 20,000 பேர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Malaimalar