அதிகமான இந்தியர்கள் BN-ஐ ஆதரிக்கத் தொடங்கியுள்ளதாக ஜோகூர் மஇகா கூறுகிறது

ஜோகூர் மாநிலத்தில் 2008ம் ஆண்டு பாரிசான் நேசனலுக்கு 45 விழுக்காடாக இருந்த இந்தியர் ஆதரவு இப்போது 75 விழுக்காடாக உயர்ந்துள்ளது என ஜோகூர் மஇகா கூறுகிறது.

2008 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த இந்தியர்கள் பிஎன்-னுக்கு மீண்டும் ஆதரவு தரத் தொடங்கியுள்ளதாக அதன் செயலாளர் எம் அசோகன் கூறுகிறார்.

தங்களது போராட்டத்துக்கு பிஎன் மட்டுமே உதவ முடியும் என்பதை ஜோகூரிலும் மற்ற இடங்களிலும் உள்ள இந்தியர்கள் அங்கீகரிக்கத்துள்ளதாக புக்கிட் காம்பிர் சட்ட மன்ற உறுப்பினரும் மாநில ஆட்சி மன்ற உறுப்பினருமான அசோகன் கூறினார்,

மஇகா ஒத்துழைப்புடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் இந்திய சமூகத்துக்கு உதவ பல சமூக, பொருளாதார திட்டங்களை அமலாக்கியிருப்பதாக அவர் அண்மையில் பெர்னாமாவிடம் கூறினார்.

அதே போன்று ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மானும் இந்திய சமூகத்தின் நன்மைக்காக பல திட்டங்களை அமலாக்கி வருவதாகவும் அசோகன் சொன்னார்.

தமிழ்ப் பள்ளிக்கூடங்கள், கோவில்கள், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பல பிரச்னைகளையும் தீர்த்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் மஇகா, மாநிலச் சட்டமன்றத்தில் நான்கு இடங்களை வைத்துள்ளது. புக்கிட் காம்பிர், காஹாங், பெர்மாஸ், தெங்காரோ ஆகியவை அந்த இடங்களாகும். மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் வைத்துள்ள சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியும் ஜோகூரில் தான் உள்ளது.

-பெர்னாமா

TAGS: