முஸ்தாபா: ஹசானும் நஷாருதினும் அம்னோ வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர்

பாஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் அம்னோ வலையில் சிக்கிக் கொண்டு அதன் பல்லவிக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருப்பதாக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி சாடியுள்ளார்.

அவர் குறிப்பாக அண்மையில் பாஸ் கட்சிக்கு பாதகமான கருத்துக்களை வெளியிட்ட முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி, முன்னாள் துணைத் தலைவர் நஷாருதின் முகமட் ஈசா ஆகியோரைக் குறை கூறினார்.

“கட்சிக்கு எதிராக சதி செய்யும் அம்னோ வலைக்குள் அவர்கள் இருவரும் சிக்கிக் கொண்டு விட்டனர் என நான் கருதுகிறேன். அவர்கள் அதனை உணருகின்றனரோ இல்லையோ அவர்கள் எதிரியின் பல்லவிக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருக்கின்றனர்.” 

“அவர்களுடைய நடவடிக்கை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அது அவர்களுக்கு அழகல்ல. கட்சிக்கும் நல்லதல்ல”, என அவர் அந்த இஸ்லாமியக் கட்சியின் ஏடான ஹராக்காவிடம் கூறினார்.

கடந்த கட்சித் தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் பதவிகளை இழந்த அவர்கள் விரக்தி அடைந்து அவ்வாறு செய்வதாக  அவர் கருதுகிறார்.

“தங்கள் முன்னாள் பதவிகளுக்கு மீண்டும் தெரிவு செய்யப்படாததால் அவர்கள் விரக்தி அடைந்துள்ளது  காரணமாக இருக்கலாம் என நான் எண்ணுகிறேன்.”

பாஸ் கட்சியின் உள் அரசியலில் நிகழ்ந்து வருவதாக தாம் கூறிக் கொண்ட “நேர்மாறான” மாற்றங்களுக்கு எதிராக அண்மையில் நஷாருதின் அறிக்கை விடுத்தார்.

மலாய்க்காரர்கள், இஸ்லாம், மன்னராட்சி ஆகியவற்றை பாஸ் கட்சியும் பக்காத்தானும் தொடர்ந்து தற்காக்கும் வரையில் தாம் அவற்றுடன் ஒத்துழைக்கப் போவதாக அண்மையில் ஹசான் கூறியிருந்தார்.

அந்த அறிக்கை இஸ்லாத்தின்  மீது பாஸ் கொண்டுள்ள கடப்பாடு குறித்து கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளதாக முஸ்தாபா குறிப்பிட்டார்.

என்றாலும் பாஸ் உறுப்பினர்கள், தனிநபர்களை ஆதரிக்காமல் கட்சியின் இஸ்லாமியக் கொள்கைகளை முழுமையாக ஆதரிப்பதால் அந்த இரண்டு தலைவர்களுடைய அறிக்கைகள் கட்சியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் முஸ்தாபா கூறிக் கொண்டார்.

“கட்சியைக் கீழறுப்புச் செய்வது நல்ல வழி அல்ல. அதன் பாதிப்பு சிறிதளவாக இருந்தாலும் கூட பாஸ் அதிகமாக பாதிக்கப்படப் போவது இல்லை. பாஸ் ஒரு காலத்தில் தலைவரைக் கூட இழந்துள்ளது. அந்த தனிநபரை பின் தொடர்ந்து எந்த உறுப்பினரும் செல்லவில்லை. அவர்கள் தொடர்ந்து இருந்து கட்சிக் கொள்கைகளைப் பின்பற்றினார்கள்,” என்றார் முஸ்தாபா.

கட்சியில் உள்ள சிலர்,  உள் விவகாரங்களை வெளியிடுவதின் மூலம் முந்திரிக் கொட்டைகளைப் போல நடந்து கொள்வதாகவும் அவர் சாடினார்.

அவர் யாரையும் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் ஹசானுக்கு அவரது கோம்பாக் செத்தியா மாநிலத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்குப் போதுமான நியமனங்களைப் பெறவில்லை எனப் பெரித்தா ஹரியானிடம் கூறிய சிலாங்கூர் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் சாஆரி சுங்கிப் -பைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகும்.

நியமனங்கள் போன்ற கட்சி உள் விவகாரங்களை பத்திரிக்கைகளுக்குத் தெரிவிக்க வேண்டாம் என பாஸ் தலைமைச் செயலாளர் கட்சித் தலைவர்களுக்கு நினைவுபடுத்தினார். காரணம் அந்த விவகாரங்களை கட்சியின் Syura மன்றம் முடிவு செய்கிறது. தலைவர் மட்டுமே அவற்றை அறிவிக்க வேண்டும்.