ஆசியா-ஐரோப்பியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.

இதனால் தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் 3-ம் அலை தாக்கியது.

இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறிப்பட்டது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் குறுகிய நாட்களில் ஏராளமான நாடுகளில் பரவியது.

இந்த நிலையில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சமாக இருந்து வருகிறது.

தென்கொரியா, ஆங்காங், சிங்கப்பூர், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ்களால் ஆசியாவில் புதிய கொரோனா அலை ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா கண்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 7 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதேபோல் ஐரோப்பாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த கண்டத்தில் நேற்று 5.47 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஜெர்மனியில் நேற்று 1.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, நெதர்லாந்து, ரஷியா ஆகிய நாடுகளில் வைரஸ் தொற்று உயர்ந்தபடி இருக்கிறது.

இங்கிலாந்தில் ஒமைக்ரானால் மீண்டும் கொரோனா பாதிப்பு தற்போது 20 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆசியா, ஐரோப்பாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு கூறும்போது, ‘கொரோனா தொற்று நோயின் முடிவு வெகு தொலைவில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய வாராந்திர கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு முன்பு உலக சுகாதார அமைப்பு கூறும்போது, ‘தொற்றுநோயின் கடுமையான கட்டம் இந்த ஆண்டு முடிவடையும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் 4-ம் அலை ஏற்படுமா என்ற கவலை நிலவுகிறது.

 

 

Malaimalar