அரசாங்கம் முன்மொழிந்த, சோஸ்மா என்ற பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) 2012 சட்டத்தின் கீழ் ஒரு முக்கியமான கால அமுலாக்கத்தை நீட்டிக்கும் தீர்மானத்தை, மக்களவை நிராகரித்தது.
அதுதான் சோஸ்மாவின் பிரிவு 4(5) ஆகும். இது கைது செய்யப்பட்ட ஒரு நபரை 28 நாட்கள் வரை விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கிறது.
இந்த சட்டம் ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் புதுப்பிக்கப்பட வேண்டும். நேற்று மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் 84 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே புதுப்பித்தலுக்கு ஆதரவளித்தனர், 86 பேர் எதிர்த்தனர். மேலும் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஜராகவில்லை.
இதன்படி வருகின்ற ஜூலை 31, 2022 அன்று இந்த விதிமுறை காலாவதியானதும் அது அமுலில் இருக்காது.
உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் சமர்ப்பித்த இந்த மசோதாவை 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் செய்தனர்.
இதற்கு முன்பு கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஒரு முறை அரசாங்கம் மக்களவை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இருப்பினும், அந்த அரசியலமைப்பு திருத்த மசோதா வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு (148) வாக்குகள் தேவைப்பட்டது.
நேற்றைய வாக்கெடுப்புக்கு வெறும் பெரும்பான்மையான வாக்குகள் இருந்தாலே போதும்.
இது மனித உரிமைக்குக் கிடைத்த வெற்றியாக இருந்தாலும், அரசாங்கம் இந்த மசோதாவை மீண்டும் அடுத்த மக்களவை கூட்டத்தொடரில் மீண்டும் வாக்கெடுப்புக்குக் கொண்டு வரலாம்.
ஹம்சா இந்த மசோதாவை முன்மொழிந்த போது, இந்த விதிக்கு மேலும் நீட்டிப்பு வழங்குவது முக்கியம் என்று வலியுறுத்தினார்.
அமைச்சரின் கூற்றுப்படி, சிக்கலான மற்றும் விரிவான ஆய்வு தேவைப்படும் சிறப்புக் குற்றங்களை விசாரிப்பதற்கு காவல்துறைக்கு இது ஒரு முக்கியமான கருவி என்றார்.
எவ்வாறாயினும், இதற்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோஸ்மா ஒரு கொடூரமான சட்டம் என்றும் பிரிவு 4(5) அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒரு வழிமுறை என்றும் விவாதித்தனர்.
இது பற்றி கருத்துரைத்த சுவராம் என்ற மனித உரிமை இயக்கத்தின் தலைவர் சிவன் துரைசாமி, சோஸ்மா ஒரு மோசமான சட்டம் என்றார்.
“இந்த சட்டத்தின் கீழ் ஒரு நபர் 28 நாட்கள் வரை பாதுகாப்பில் வைக்கப்படலாம். அந்த காலகட்டத்தில் அந்த நபர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். அதேசமயம் அந்த 28 நாட்களில் நாட்கள் அவர் பாதுகாப்பில் இருக்கும் பொழுது அவரை யாரும் பார்க்க இயலாது.”
மேலும், “இந்த சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனை வழங்க இயலாது. இந்த சட்டம் அவரை விசாரணைக்கு உட்படுத்த கூடிய காலத்தை மட்டுமே வழங்கும்”.
அதன் பிறகு அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை மேலும் விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு குற்றவியல் சட்டம் பயன் படுத்தப்படும். அதன் கீழ் தான் அவருக்குத் தண்டனை வழங்கப்படும்.
ஆக அந்த குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது அவர் மீண்டும் காவலில் இருப்பார் சோஸ்மா சட்டத்தின் கீழ் அவருக்கு பிணை கிடையாது.
தற்சமயம் இது போல் சுமார் 3,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்கிறார் சிவன்.