ரஷியாவில் இருந்து வெளியேறுங்கள்- பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடம் தொடர்ந்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அவ்வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று பிரான்ஸ் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, ரஷியாவில் இருந்து பிரான்ஸ் நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

“பிரான்ஸ் நிறுவனங்கள் இன்னும் ரஷியாவில் செயல்படுவது வெட்கக்கேடானது. எனவே, ரெனால்ட், ஆச்சான், லெராய் மெர்லின் மற்றும் பிற நிறுவனங்கள் ரஷியாவில் இருந்து வெளியேற வேண்டும். உக்ரைனில் உள்ள மரியுபோல் போன்ற பேரழிவிற்கு உள்ளான நகரங்களின் படங்கள், எல்லோரும் பார்த்த முதல் உலகப் போரின் புகைப்படங்களில் உள்ள வெர்டூனின் பேரழிவை நினைவுபடுத்துகின்றன.

ரஷிய ராணுவம் இலக்குகளை வேறுபடுத்தி பார்ப்பதிதில்லை. அவர்கள் குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். போர்க்குற்றங்கள் பற்றிய கருத்துகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை” என்றும் ஜெலன்ஸ்கி பேசினார்.

 

Malaimalar