ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா வான்வெளி தாக்குதல் – 8 பேர் பலி

ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்சும் அங்கம் வகிக்கிறது. இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இதற்கிடையே, சவுதி அரேபியாவின் மிகப்பெரிய அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இதில் ஜுடா நகரில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்குகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், எண்ணெய் கிடங்கில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தியது.

ஏமனின் சனா மற்றும் ஹொடைடா ஆகிய இரு நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் போர் விமானங்கள் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Malaimalar