தென்கொரியாவில் நடுவானில் விமானப்படை விமானங்கள் மோதல்: 3 விமானிகள் பலி

தென்கொரியா கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் போராடி வருகிறது. தினமும் 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த நாட்டின் விமானப்படையின் இரு போர் விமானங்கள் வழக்கமான பயிற்சிக்காக நேற்று புறப்பட்டு சென்றன. இவ்விரு விமானங்களும் கேடி-1 பயிற்சி விமானங்கள் ஆகும்.

இவ்விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தலைநகர் சியோலில் இருந்து சுமார் 440 கி.மீ. தென்கிழக்கில் உள்ள சச்சியோன் என்ற இடத்தில் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டு கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தன.

அப்போது உள்ளூர் நேரம், மதியம் 1.36 மணி ஆகும். விபத்து , சச்சியோன் விமானப்படை தளத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் நடந்துள்ளது. இவ்விருவிமானங்களிலும் தலா 2 விமானிகள் மட்டுமே பயணித்துள்ளனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மீட்பு பணிகளுக்காக 2 ஹெலிகாப்டர்களும், 14 வாகனங்களும், 35 மீட்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த கோர விபத்தில் 3 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4-வது விமானி படுகாயம் அடைந்துள்ளதாகவும், காணாமல் போய்விட்டதாகவும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விபத்து குறித்து விமான படையினர் வெளியிட்ட அறிக்கையில், “விமானிகள் அவசரமாக தப்பிக்க முயற்சித்த போதும், இயலாத சூழலில் 3 விமானிகள் உயிரிழந்துள்ளனர். 4-வது விமானியை காணவில்லை ” என கூறியது.

இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இதுபற்றி உடனடி விசாரணைக்கு விமான படை உத்தரவிட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானங்கள் ஒற்றை என்ஜின் கொண்டவை, இலகுரக தாக்குதல் விமானம். தென் கொரிய அரசின் பாதுகாப்பு மேம்பாட்டு முகமை மற்றும் கொரிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பு ஆகும்.

இந்த விமானங்கள் நடுவானில் மோதி கீழே விழுந்தபோதும் வீடுகளுக்கு சேதமோ, பொதுமக்களுக்கு உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.

கடந்த ஜனவரி மாதம் விமானப்படையின் ‘எப்-5இ’ போர் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் விமானி உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.

 

 

Malaimalar