கடைசி பந்து வரை போராடுவேன்- பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து இம்ரான் கான் கருத்து

பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்த அந்நாட்டு அதிபரின் உத்தரவு செல்லாது என்றும், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை இம்ரான்கான் அரசு சந்திக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று தமது கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறும் என்றும், மேலும் தமது அமைச்சரவைக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை தாம் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளதாகவும் அவர்

கூறியுள்ளார். பாகிஸ்தானுக்காக தாம் எப்போதும் கடைசி பந்து வரை போராடுவேன் என்றும் தமது டுவிட்டர் பதிவில் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று அரசு சட்டக்குழுவினரை சந்தித்த இம்ரான்கான் உச்சநீதிமன்றம் அறிவிக்கும் எந்த முடிவையும் ஏற்றுக் கொள்வோம் என்றும், எந்த வெளிநாட்டுச் சதியையும் வெற்றியடைய விடமாட்டோம் என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே, பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாகவும், இதற்காக நாட்டில் உள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்க விரும்புவதாக லண்டனில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தினம் பாகிஸ்தானின் வரலாற்றில் பொன்னான வார்த்தைகளால் நினைவுகூரப்படும் என பாகிஸ்தான் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Malaimalar