பெர்சத்து தலைவர் முகைதின் யாசின், கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் பாக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையே கையெழுத்தான மாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) நிலை குறித்து பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் விளக்கம் கேட்பதாக கூறினார்.
கடந்த வாரம் பெரிகாத்தான் நேசனல் (PN) மற்றும் இஸ்மாயில் சப்ரி தலைவர்க்கும் இடையிலான கூட்டத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறிப்பிடப்பட்டதாகவும், அதை நீட்டிக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து அந்த நேரத்தில் எந்த விவாதங்களும் தேவையில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் கூறினார்.
“…ஆனால் இன்று சற்று வித்தியாசமான முடிவாக தெரிகிறது”.
“எனவே, இஸ்மாயில் சப்ரி அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறாரா அல்லது நீட்டிக்க விரும்புகிறாரா என்பது குறித்து நாங்கள் விளக்கம் கேட்போம்,” என்று ஏப்ரல் 1 அன்று நாட்டின் எல்லை மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று KLIA வில் நடவடிக்கைகளை சரிபார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
தேசிய மீட்பு கவுன்சில் தலைவரான முகைதின், ஜூலை 31ம் தேதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியான பிறகு நீட்டிக்கப்பட மாட்டாது, என்று அம்னோ உச்ச கவுன்சிலின் நேற்றைய முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு கூறியிருந்தார்.
அரசாங்கத்தின் சார்பாக இஸ்மாயில் சப்ரி மற்றும் ஹராப்பான் தலைவர்களான PKR தலைவர் அன்வர் இப்ராஹிம், அப்போதைய DAP பொதுச்செயலாளர் லிம் குவான் எங், அமனா தலைவர் முகமது சாபு மற்றும் உப்கோ தலைவர் வில்பிரட் மேடியஸ் டாங்காவ் ஆகியோர் செப்டம்பர் 13, 2021 அன்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கோவிட்-19 திட்டத்தை வலுப்படுத்துதல், நிர்வாக மாற்றம், நாடாளுமன்ற சீர்திருத்தங்கள், மலேசிய ஒப்பந்தம் MA63, நீதித்துறை சுதந்திரம் மற்றும் வழிநடத்தல் குழுவை நிறுவுதல் ஆகிய ஆறு முனைப்புகளை உள்ளடக்கியது.
முன்னதாக, இஸ்மாயில் சப்ரி புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த அம்னோ உச்ச கவுன்சிலின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும், அம்னோ துணைத் தலைவர் என்ற முறையில், கவுன்சில் எடுத்த முடிவுக்கு அவர் உட்பட்டவர் என்றும் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது
15வது பொதுத் தேர்தலில் இஸ்மாயில் சப்ரியை பிரதமர் வேட்பாளராக ஒருமனதாக முன்மொழிந்த அம்னோ பற்றிய கேள்விக்கு, இந்த விவகாரம் கட்சியின் விஷயம் என்றும் PN இதே நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும் முகைதின் கூறினார்.