புதிய புக்கிட் ஈஜோக் பள்ளிக்கு உதவுங்கள்

இராகவன் கருப்பையா- தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்று புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பிள்ளைகள் அமர்ந்து கல்வி கற்கத் தேவையான மேசை நாற்காலிகள் தேவைபடுகின்றன.

செப்பாங், சுங்ஙை பிலேக் வட்டாரத்தில் தேசிய வகை லாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிடம் பிரமாண்டமான வகையில் நிர்மாணிக்கப்பட்டு கோலாகலமாகத் திறப்பு விழாக் காண்பதற்கு தயாராய் உள்ள நிலையில், அத்தியாவசியத் தளவாடப் பொருள்களின்றி இருக்கிறது.

இன்னும் இரண்டே மாதங்களில் அதிகாரப்பூர்வமாகக் கல்வியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இப்பள்ளி, அரசாங்கத்தின் முழு ஆதரவுப் பெறாதப் பள்ளிகளில் ஒன்றாகும். எனவே மேசை நாற்காலி போன்றத் தளவாடப் பொருள்களை பள்ளியின் மேலாளர் வாரியம் சொந்த முயற்சியில் கொள்முதல் செய்ய வேண்டும் எனும் நிலை உருவாகியுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதத்தில் சுமார் 90 பிள்ளைகள் (வகுப்புகள் 1,2 & 3) இங்கு கல்வியைத் தொடருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு ‘டி.என்.பி.’யுடனான மின்சாரத் தொடர்புகளுக்குத் தேவையான துணை மின் நிலையத்திற்கும் ‘இண்டா வாட்டர்’இன் கழிநீர் நிர்வாகப் பணிகளுக்கும் பணம் செலவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இவ்விரு வசதிகளும் முறையாக நிர்மாணிக்கப்படவில்ல என்றால் ‘சி.எஃப்.’ எனப்படும் அரசாங்க ‘பயன்பாட்டுச் சான்றிதழ்’ கிடைக்காது என்பதையும் சந்திரசேகரன் தெளிவுபடுத்தினார்.

அவசியமற்ற வேலைகளுக்கு பணம் செலவிடப்படவில்லை என்றும் ஒரு சல்லிக்காசுக் கூட தவறாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இப்பள்ளிக்கூடத்தை அரசாங்கத்தின் முழு ஆதரவு பெற்றப் பள்ளியாக மாற்றுவதற்கு கடந்த 2 ஆண்டுகளாக கல்வியமைச்சுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

நவீன கணினி வசதிகள் உள்பட மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு தளவாடப் பொருள்களை வாங்குவதற்கு கிட்டதட்ட 3 இலட்சம் ரிங்கிட் செலவாகும் என்று கூறிய சந்திரசேகரன் இதுவரையில் சுமார் 25 ஆயிரம் ரிங்கிட் மட்டுமே கைவசம் உள்ளது என்று விவரித்தார்.

இந்நாட்டில் ஒன்றன் பின் ஒன்றாக தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் மறைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் நிலைத்திருக்கும் பள்ளிகளாவது தொடர்ந்து செழித்தோங்கக் கைக் கொடுப்பது நம் அனைவருடையக் கடமையாகும்.

லாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப் பள்ளிக்கு நிதி உதவி செய்ய விரும்புவோர் கீழ்காணும் பொருளகக் கணக்கில் அதனை செலுத்தலாம்:

(RHB BANK: 21221900022255) சந்திரசேகரனின் தொடர்பு எண்: 0122081037.