போர் விமானம் வாங்கி கொடுங்கள்… ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க மக்களிடம் நிதி திரட்டும் உக்ரைன்

உக்ரைன் மீது ரஷியா நடத்திய வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. முக்கிய நகரங்களை முற்றுகையிட்டு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவமும் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து போராடி வருகிறது. ரஷியாவால் கைப்பற்றப்பட்ட சில இடங்களை மீட்டுள்ளது. இருப்பினும் ரஷியாவுடன் உக்கிரமாக மோதும் அளவிற்கு ஆயுத பலம் இல்லாததால், தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து வலுவாக போரிடுவதற்கு போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ள உக்ரைன் அரசு, இதற்காக ஆன்லைன் மூலம் நிதி திரட்டும் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.

“தயவு செய்து எனக்கு ஒரு போர் விமானம் வாங்கிக் கொடுங்கள்” என்று பிரசார இணையதளத்தில் தலைப்பிடப்பட்டுள்ளது.

இணையதள முகப்புப் பக்கத்தில், உக்ரைன் விமானி ஒருவர் போர் விமானங்கள் உட்பட அழிக்கப்பட்ட ராணுவ உபகரணங்களை நோக்கி நடந்து சென்று, பின்னர் கேமராவைப் பார்த்து, ‘எனக்கு ஒரு போர் விமானம் வாங்கிக் கொடுங்கள்’ என்று கூறும் வீடியோவும் இடம்பெற்றுள்ளது. ரஷியாவின் தாக்குதலால் அழிக்கப்பட்ட வீடுகள் மற்றும் நகரங்களின் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

உக்ரைன் விமானிகளுக்கு தேவையான போர் விமானங்களின் வகைகளையும் அந்த இணையதளத்தில் பட்டியலிட்டு, அதற்காக சுமார் 25 மில்லியன் டாலர் தேவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ரஷியா பிப்ரவரி 24ம் தேதி படையெடுப்பை தொடங்கிய நாளில் இருந்தே உக்ரைன் வான் பகுதியை தடை செய்யும்படி நேட்டோ நாடுகளிடம் உக்ரைன் கேட்டுக்கொண்டது. அல்லது குறைந்தபட்சம், ரஷிய விமானப்படைக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் கூடுதல் போர் விமானங்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக ராணுவம் தெரிவித்தது. ஆனால் உக்ரைனுக்கு அப்பால் மோதல் பரவும் என்ற அச்சத்தால் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.

ஆரம்பத்தில், பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரைன் ராணுவத்திற்கு போர் விமானங்களை வழங்குவதாக அறிவித்தன. ஆனால் ரஷியாவுடனான பதற்றம் அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்கா வீட்டோ செய்ததால் அந்த திட்டம் கைகூடவில்லை.

 

 

Malaimalar