ரூபிளில் கட்டணம் செலுத்தாததால் எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது ரஷியா – போலந்து குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.

ரஷிய எரிவாயு மீதான தடைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், பல ஐரோப்பிய நாடுகள் மாஸ்கோவிலிருந்து உக்ரைன் வழியாக எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன.

இதற்கிடையே, எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என ரஷியா அதிபர் புதின் கடந்த மாதம் 25-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். நட்பற்ற நாடுகளுக்கு எங்கள் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை ரஷ்ய ரூபிள்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த மாற்றங்களை விரைவில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

இந்நிலையில், ரூபிள்களில் கட்டணம் செலுத்த மறுத்ததால் தங்கள் நாடுகளின் இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷியா நிறுத்தி வைத்துள்ளது என போலந்து மற்றும் பல்கேரியாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூபிள்களில் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு முதல் நடவடிக்கையாக போலந்து, பல்கேரியாவுக்கு எரிவாயு விநியோகத்தை ரஷியா நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Malaimalar