தேசிய காது கேளாதோர் கராத்தே வீரர் வி இலமாறன் இன்று பிரேசிலின் காக்சியாஸ் டோ சுல் நகரில் நடைபெற்ற 24வது காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில், நமது நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்றார்.
22 வயதான அவர், 84 கிலோ எடைக்குக் கீழான ஆண்களுக்கான குமிதே இறுதிப் போட்டியில் உக்ரைனின் மக்னோ ஒலெக்சானரோடு மோதினார். தங்கத்தை குறிவைத்த அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
மலேசிய காதுகேளாதோர் விளையாட்டு சங்கத்தின் (MSDeaf) கூற்றுப்படி, இலமாறன் முன்னதாக முதல் சுற்றில் பிரேசிலின் செர்ஜியோ கார்சியாவை தோற்கடித்தார், அதைத் தொடர்ந்து இஸ்ரேலின் அவி போக்லரை கால் இறுதி சுற்றிலும் மற்றும் ஈரானின் அப்டோல்காஃபோர் எபாஹிம் அரையிறுதி சுற்றிலும் வென்றார்.
இறுதிப் போட்டியைக் காண பிரேசில் சென்ற தேசியக் குழுத் தலைவர் ஓங் ஷின் ருயென், காது கேளாதோர் ஒலிம்பிக்கில்,இலமாறனின் சாதனை குறித்து மிகவும் பெருமைப்படுவதாகக் கூறினார்.
MSDeaf முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய ஒரு பதிவில், இந்த வரலாற்றுச் சாதனையுடன், தேசிய காது கேளாதோர் விளையாட்டுக் குழுக்கள் – பேட்மிண்டன், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் தடகளம் போன்ற பிற விளையாட்டுகளிலும் வென்று பதக்கப் பட்டியலில் மலேசியாவை சேர்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளன என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில், ஈரானின் தெஹ்ரானில் நடந்த உலக காது கேளாதோர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியாவின் முதல் பதக்கமாக வெண்கலத்தை கைப்பற்றியதன் மூலம் இலமாறன் வரலாறு படைத்தார்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, பிரேசிலில் மே 1 முதல் 15 வரை நடைபெறும் காது கேளாதோர் ஒலிம்பிக்கில் 70 நாடுகளைச் சேர்ந்த 1,956 விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையில், காது கேளாதோர் ஒலிம்பிக்கில் சாதனை படைத்த இலமாறனுக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமது பைசல் அசுமு வாழ்த்து தெரிவித்தார்.
“நமது தேசிய காதுகேளாத விளையாட்டு வீரருக்கு நல்வாழ்த்துக்கள். இலமாறன் தேசிய வீரர்! அவரது சாதனைக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் வென்ற முதல் வெள்ளிப் பதக்கம், ”என்று அவர் தனது முகநூலில் இன்று பதிவிட்டுள்ளார்.
- பெர்னாமா