இம்ரான் கானின் சொத்துகளை ஆய்வு செய்ய ஷெரிப் தலைமையிலான அரசு முடிவு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நடந்த வாக்கெடுப்பின் முடிவில், இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார். இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சொத்துகள் மற்றும் வருவாய் பற்றி ஆய்வு செய்ய ஷெபாஸ் ஷெரிப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

இதுதவிர, பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் மத்திய செயலகத்தில் ஊழியர்களாக பணியாற்றிய தாஹிர் இக்பால், முகமது நோமேன் அப்சல், முகமது அர்ஷத் மற்றும் முகமது ரபீக் ஆகியோரது வங்கி கணக்கு விவரங்களையும் வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனை தி நியூஸ் இன்டர்நேசனல் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று, பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி மற்றும் இம்ரான் கானின் சர்வதேச வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டு பெறுவதற்காக சர்வதேச நிதி அமைப்புகளுக்கு கடிதம் எழுதவும் அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஊழியர்கள் 4 பேரின் வங்கி கணக்குகளில் பெரிய அளவில் பணம் வரவு வைக்கப்பட்டு உள்ளது.  இதுபற்றி சான்றுகள் கிடைக்க பெற்றால் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.

 

Malaimalar