விமான பயணத்தில் இனி மாஸ்க் கட்டாயமில்லை: ஐரோப்பா ஒன்றியம் அறிவிப்பு

கொரோனா பரவல் தொடங்கி கிட்ட இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்புகள் உலகம் எங்கும் படிப்படியாக குறைந்து வருகின்றன.

இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் விமான நிலையங்களிலும், விமானங்களிலும் மாஸ்க் அணிவது இனி கட்டாயமாக இருக்காது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும் ஐரோப்பா முழுவதும் பொது போக்குவரத்தில் கொரோனா எதிர்ப்பு கொள்கைகளை மாற்றியமைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றிய ஏவியேஷன் சேஃப்டி ஏஜென்சி (ஈசா) தெரிவித்துள்ளது.

தொற்று நோய் பாதிப்புகள் சமீபத்தில் குறைந்து வருவதை கணக்கில் கொண்டு, குறிப்பாக தடுப்பூசியின் டோஸ்கள் மற்றும் இயற்கையாகப் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்திருப்பதாக இரு நிறுவனங்களும் ஒரு கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக  ஈசா நிர்வாக இயக்குனர் பேட்ரிக் கூறுகையில், பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருமல், தும்மல் உள்ள பயணிகள், அருகில் அமர்ந்திருப்பவர்களின் பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிவதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் ஆண்ட்ரியா அம்மோன் கூறுகையில், “கொரோனா நெறிமுறைகள் தொடர்பான புதிய பரிந்துரைகள் மே 16ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி ஆகியவை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று  அவர் கூறினார்.

 

Malaimalar