சர்ச்சைக்குரிய இண்டர்லாக் நாவல் பள்ளிக் கூடப் பாடத் திட்டத்திலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, சிறுபான்மை பிரிவு ஒன்றின் நெருக்குதலுக்கு அடி பணிந்த பலவீனமான அரசாங்கத்தையே காட்டுகிறது என மலாய் வலச்சாரி நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா கூறுகிறது.
இடைநிலைப்பள்ளிகளில் ஐந்தாம் படிவத்துக்கான இலக்கியப் புத்தகமாக இருந்த அது மீட்டுக் கொள்ளப்பட்டது மீது பெர்க்காசா ” மஇகா தலைவர் ஜி பழனிவேல் மீது மிகவும் ஆத்திரமாக இருக்கிறது” என அதன் தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி நேற்றிரவு அனுப்பிய குறுந்தகவல் குறிப்பிட்டது.
“பாடப் புத்தகம் என்னும் நிலையிலிருந்து இண்டர்லாக் நாவலை மீட்டுக் கொள்வது என அரசாங்கம் எடுத்துள்ள முடிவு மீது பெர்க்காசா மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளது. வருத்தமும் அடைந்துள்ளது.”
“அரசாங்கம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. தலைக்கனத்துடன் இருக்கும் சிறுபான்மை சமூகம் ஒன்றின் நெருக்குதலை சமாளிக்க அது தவறி விட்டது”, என்றும் சையட் ஹசான் சொன்னார்.
எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்திய சமூகத்தைக் கவர மஇகா முயலுவதாகவும் அந்த பெர்க்காசா தலைவர் கூறிக் கொண்டார்.
கிட்டத்தட்ட ஓர் ஆண்டுகாலமாக சர்சைக்குள்ளாகியிருந்த இண்டர்லோக் பாடநூல் இடைநிலைப்பள்ளி பாடத்திட்டத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்படும் என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது.
அரசாங்கம் அந்த சர்ச்சைக்குள்ளான இண்டர்லோக் நாவலை மீட்டுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக மஇகா தலைவர் ஜி. பழனிவேல் தெரிவித்தார். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது.
கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.
“பல்வேறு கூறுகளைக் கவனத்தில் எடுத்துகொண்டப் பின்னர் அம்முடிவு எடுக்கப்பட்டது. அம்முடிவுக்கு இந்திய சமூகம் நன்றியுடையதாக இருக்கிறது”, என்றார் பழனிவேல்.
அந்த நாவலுக்கு எதிராக இந்திய சமூகம் கடுமையான கண்டனம் தெரிவித்து வந்துள்ளது. அது சமூகத்தை அவமதிக்கும் சொற்களைக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது.