பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன்னை கொல்வதற்கு பாகிஸ்தானிலும் வெளிநாட்டிலும் சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறியது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் சியால்கோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், “என் உயிரை பறிக்க சதி நடக்கிறது. இந்த சதி குறித்து சில நாட்களுக்கு முன்பு எனக்கு முழுமையாக தெரியவந்தது. மூடிய அறைகளில் எனக்கு எதிராக இங்கும் வெளிநாடுகளிலும் சதித் திட்டம் தீட்டப்படுகிறது. அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு வீடியோ பதிவு செய்துள்ளேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் இந்த சதியின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரிய வரும்” என்றார்.
இதையடுத்து இம்ரான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சகம் விரிவான விளக்கத்தை அளித்த பின்னர், அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி உள்துறை மந்திரி ராணா சனாவுல்லாவுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார்.
இம்ரான் கானுக்கு பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து மாகாண அரசாங்கங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில் இம்ரான் கான் பாதுகாப்பில் ஒரு தலைமை பாதுகாப்பு அதிகாரியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள இம்ரான் கான் வீட்டில் 94 போலீஸ்காரர்கள் மற்றும் துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்ரான் கான் வெளியில் செல்லும்போது, அவருடன் காவல்துறையின் நான்கு வாகனங்கள் மற்றும் 23 போலீஸ்காரர்கள், துணை ராணுவ படையின் 5 வீரர்கள் பாதுகாப்புக்காக செல்வார்கள் என உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.
பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கடந்த மாதம் வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வரும் இம்ரான் கான், தனது அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா சதி செய்ததாக குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவும் தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கமும் மறுத்துள்ளன.
Maliamalar