உலகளாவிய நிதி அறிக்கை ஒன்று நாட்டிலிருந்து கள்ளத்தனமாக மூலதனம் வெளியேறுவதைக் கவனப்படுத்தியுள்ளது குறித்துக் கருத்துரைத்த டிஏபி எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, அது மலேசியா “ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தோல்வி அடைந்துவருவதைத் தெளிவாகக் காட்டுகிறது”, என்றார்.
வாஷிங்டனில் தளம்கொண்டுள்ள நிதி கண்காணிப்பு அமைப்பான குளோபல் பைனான்சியல் இண்டிக்ரிடி(ஜிஎப்ஐ) நேற்று வெளியிட்டிருந்த அறிக்கை, 2009-இல் மட்டும் ரிம150(யுஎஸ்$47 பில்லியன்)பில்லியன் கள்ளத்தனமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகக் கூறியது.
அது தந்துள்ள விவரத்தின்படி 2000-இலிருந்து 2008வரை நாட்டைவிட்டு வெளியேறிய மொத்த பணம் ரிம927(யுஎஸ்291பில்லியன்)பில்லியன்.
பெரும்பகுதி கள்ள மூலதனம் விலைகளில் செய்யப்படும் திருகுதாளங்கள்வழி வெளியில் கொண்டு செல்லப்படுகிறது என்று கிள்ளான் எம்பியான சந்தியாகு தெரிவித்தார்.
இதில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை பற்றிப் பொய்யான தகவல்களைச் சுங்கத்துறைக்கு கொடுக்கிறார்கள்.அங்கு ஊழலும் திறமையின்மையும் நிறைந்திருப்பதால் அவர்கள் தப்பித்தும் கொள்கிறார்கள்.
“ரிம10-க்கு உற்பத்தி செய்து அதன் விலையை ரிம3 என்பார்கள்.இதனால் குறைவான வரியே செலுத்த வேண்டியிருக்கும்”.இதுதான் நடக்கிறது ஏனென்றால், சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களின் வேலையை ஒழுங்காக செய்வதில்லை”.
இதைத் தடுக்க பேங்க் நெகாரா என்ன செய்யலாம் என்று கேட்டதற்கு,முதலில் “பிரச்னைக்குத் தீர்வுகாணும் அரசியல் உறுதிப்பாடே இல்லையே”, என்றார்.
“எம்ஏசிசி-க்கு அதைத் தீர்ப்பதில் கொஞ்சம்கூட அக்கறை இல்லை” என்பதால் “ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மலேசியா தொடர்ந்து தோல்வி கண்டுதான் வரும்”என்றவர் சொன்னார்.
டிஏபி அனைத்துலகச் செயலாளர் லியு சின் தோங், இந்த ஊழலுக்கு சுங்கத்துறை மட்டும் காரணமல்ல என்றார்.
“சுங்கத்துறை பக்கம் மட்டுமே விரலை நீட்டக்கூடாது.இதில் அதன் பங்கு சிறியதுதான்”, என்றார்.
குறைந்தது 9 ஆண்டுகளாக இது நிகழ்ந்து வருவதாக ஜிஎப்ஐ அறிக்கை கூறுகிறது.அதனால் பல தலைகள் உருள வேண்டும்”, என்று அந்த புக்கிட் பெண்டேரா எம்பி கூறினார்.
இந்நெருக்கடிக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் பேங்க் நெகாராவும் உரிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.ஆனால், அதைச் செய்யவில்லை, ஏன் என்று அவர்கள்தான் விளக்க வேண்டும் என்றாரவர்.