பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் – இந்தோனேசியா அதிபர் அறிவிப்பு

உலகின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. பாமாயில் இந்தோனேசியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயாகும். அதேசமயம் கச்சா பாமாயில் அழகுசாதனப் பொருட்கள் முதல் சாக்லேட் வரை பரவலான பயன்பாடுகளுக்காக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, உக்ரைன் விவசாய சக்தியின் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து சமீபத்திய வாரங்களில் அதிக விலையை எட்டிய பல முக்கிய உணவுப் பொருட்களில் காய்கறி எண்ணெய்களும் அடங்கும்.

இதற்கிடையே, இந்தோனேசியா தற்போது பாமாயில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இதனால் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்து இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்தார். அரசின் முடிவின் காரணமாக பாதிப்பு அடைந்த விவசாயிகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் தற்போது 60 லட்சம் டன் பாமாயில் கையிருப்பில் உள்ளதால் ஏற்றுமதிக்கு விதித்த தடையை பரிசீலிக்குமாறு அரசுக்கு எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாமாயிலுக்கான ஏற்றுமதிக்கு வரும் 23ல் இருந்து தடை விலக்கப்படுவதாக இந்தோனேசியா அரசு அறிவித்துள்ளது.

பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீங்கியதை தொடர்ந்து, அதை இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என தெரிகிறது.

 

 

Malaimalar