கூட்டரசு அரசாங்கம் இவ்வாண்டு தாசெக் குளுகோரில் உள்ள 74 குடியானவர்கள் தங்களது விளைச்சலை அதிகரித்துக் கொள்ள உதவும் பொருட்டு 500,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
நாடாளுமன்ற விவசாய மேம்பாட்டு மன்றத்தின் வழியாக அந்த நிதி உதவி கொடுக்கப்படுகிறது.
அந்த விவரங்களை பிரதமர் துறை அமைச்சர் நோர் முகமட் யாக்கோப் வெளியிட்டார்.
விவசாயிகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ளவும் உற்பத்திப் பொருட்களை விற்பனைக்கு அனுப்புவதற்கு உதவும் பொருட்டும் அந்த உதவி வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
“விண்ணப்பதாரர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப எந்த வகையிலான உதவி அவர்களுக்குத் தேவை என்பது அடையாளம் காணப்படும். கால்நடைகள், எந்திர சாதனங்கள், மின்சாரப் பொருட்கள் போன்ற உதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.”
“47 விண்ணப்பதாரர்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்,” என அவர் தாசெக் குளுகோர் விவசாய மேம்பாட்டு மன்றக் கூட்டத்துக்கு நேற்று தலைமை தாங்கிய பின்னர் நோர் யாக்கோப் பெர்னாமாவிடம் பேசினார்.
நோர் முகமட், தாசெக் குளுகோர் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். உதவிகளைப் பெற்றவர்களுடைய முன்னேற்றத்தை கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெர்னாமா