மலேசியாவில் பிஎன்-னுக்கு பிந்திய கால கட்டத்தில் ஊடகங்கள்

எதிர்க்கட்சிகள் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அது பொறுப்பேற்ற முதல் நொடியிலிருந்து வலுவான, அச்சமில்லாத, உண்மையான பத்திரிக்கைகளுக்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு மலேசியாகினி கட்டுரையாளர் டீன் ஜோன்ஸ் கூறுகிறார்.

“மலேசியா எல்லா வகையான செய்தி பத்திரிக்கைகளுடன் மிகப் பெரிய ஊடக அமைப்பைக் கொண்டுள்ளது. அவை பிஎன்-னுக்கு பிந்திய கால கட்டத்தில் பல வகையான கருத்துக்களையும் தோற்றங்களையும் வெளியிடும்,” என அவர் சொன்னார்.

‘மலேசியாவில் பிஎன்-னுக்கு பிந்திய கால கட்டத்தில் ஊடகங்களின் பங்கு’ என்னும் தலைப்பில் நடைபெற்ற குழு விவாதத்தில் அவர், மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் -உடன் கலந்து கொண்டு பேசினார்.

அந்த நிகழ்வை துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் புத்தாக்கத் தொழில்கள் பிரிவின் தலைவரும் இணைப் பேராசிரியருமான கார்மென் இங்கெ-நடத்தி வைத்தார்.

“முக்கிய நீரோட்டத்தில் உள்ள ஊடகங்களான நாளேடுகள் மட்டுமின்றி மலேசியாவில் பிஎன்-னுக்கு பிந்திய கால கட்டத்தில் அனைத்து ஊடகங்களும் முக்கியப் பங்காற்ற வேண்டியிருக்கும்,” ஜான்ஸ் ஆரூடம் கூறினார்.

“அவற்றில் எவை நிலைத்திருக்கும் என்பதை சந்தைச் சூழ்நிலை முடிவு செய்யும் என்றும் அவர் கருதுகிறார்.

கான். இவ்வட்டாரத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் மலேசியாவை ஒப்பிட்டார். மாற்றங்கள் ஏற்படுமானால் அவை கரடுமுரடாக இருக்கும் என அவர் சொன்னார்.

“உறுதியற்ற சூழ்நிலை ஏற்படும்- மாற்றம் காணும் எந்த நாட்டிலும் நாம் அதனை எதிர்பார்க்க வேண்டும். குறிப்பாக ஆளும் கட்சி நீண்ட காலத்துக்கு ஆட்சியில் இருந்து விட்ட இந்தோனிசியா, தைவான், கொரியா ஆகியவற்றைப் பார்க்க வேண்டும்.”

“பெரும்பாலும் மலேஇயா இந்தோனிசியப் பாதையைத் தேர்வு செய்யும் என நம்பலாம். அந்த நாட்டில் ஊடகங்கள் பொறுப்புணர்வைக் காட்டியுள்ளன. அதே வேளையில் உண்மைக்கு மதிப்பளிக்கின்றன. தனிநபர் ரகசியத்தை பாதுகாக்கின்றன.”

அவர் பர்மாவிலும் தாய்லாந்திலும் ஏற்பட்டுள்ள சாதகமான அம்சங்களையும் கான் சுட்டிக் காட்டினார். அவர் பர்மாவில் நிகழும் மாற்றங்களின் வேகம் குறித்து அவர் வியப்பு தெரிவித்தார்.

“நாம் கவனமாக இல்லாவிட்டால் பர்மா, மலேசியாவைக் காட்டிலும் மிகவும் சுதந்திரமாக இருக்கக் கூடும்,” என அவர் புன்னகையுடன் கூறினார்.

இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் பர்மிய அரசாங்க எதிர்ப்பு செய்தி இணையத் தளமான மிஸ்ஸிமா-வை பர்மாவின் புதிய ஊடகச் சட்டத்தை வரைவதற்கு உதவி செய்யுமாறு பர்மா அழைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டத்தை திருத்தி எழுதுவதற்கு பிஎன், மலேசியாகினி ஆசிரியர்களை அல்லது உங்களில் யாராவது ஒருவருடைய கருத்துக்களை பிஎன் கேட்கும் என உங்களால் கற்பனை செய்ய முடியுமா ?” என கான் வினவிய போது கூட்டத்தில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.

ஆர்டிஎம்-மை மலேசியாவின் பிபிசி-யாக்குவது

தமது நாடான ஆஸ்திரேலியாவில் பல வகையான ஊடகங்கள் இல்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்ட ஜான்ஸ், என்றாலும் அதன் பொது ஒலிபரப்பு நிறுவனமான ஏபிசி சுதந்திரமான ஊடகத் தொழிலைப் பின்பற்றி வருவதாகச் சொன்னார்.

தாய்லாந்தில் இயங்கும் பொது ஒலிபரப்பு நிறுவனத்தைப் போல ஆர்டிஎம்-மை மாற்ற முடியும் என கான் நம்பிக்கை தெரிவித்தார்.

அந்தத் தாய்லாந்து அமைப்புக்கு அரசாங்க நிதி உதவி கிடைக்கிறது, இருந்தும் அது சுதந்திரமாக செய்திகளை வெளியிட்டு வருகிறது.

“தாய்லாந்து பொது ஒலிபரப்புச் சேவைக்கு அரசாங்க நிதி உதவி கிடைத்தாலும் பத்திரிக்கையாளர்களும் ஆசிரியர்களும் எத்தகைய தலையீடும் இல்லாமல் இயங்குகின்றனர்.”

“அந்த மாதிரியை நான் ஆராயலாம்,” என்றார் அவர்.

ஜான்ஸ் மலேசியாகினியில் எழுதிய கட்டுரைகளைக் கொண்ட நான்கு புத்தகங்கள் அந்த விவாதத்தின் போது வெளியீடு கண்டன.

அந்த நிகழ்வில் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். புத்தக வெளியீட்டு நிறுவனமான Gerakbudaya Pubishing House அந்த நிகழ்வை கோலாலம்பூர், சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தில் நடத்தியது.

ஜான்ஸ் விளம்பர நிர்வாகி ஆவார். அவர் எழுத்தாளராகவும் கல்வியாளராகவும் பணியாற்றுகிறார். 2007ம் ஆண்டு தொடக்கம் Gerakbudaya அவரது வாராந்திரக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.

‘1Malaysia.con’ என்னும் தலைப்பைக் கொண்ட அவருடைய அண்மைய புத்தகம் 2011ம் ஆண்டு ஜுலை மாதம் வெளியானது.