தோக்கியோ: ஆசியாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென்கொரியாவில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை ஜப்பான் சென்று சேர்ந்தார்.
ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன், ஜப்பானியப் பேரரசர் நருஹிட்டோவை பைடன் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. கிஷிடாவுடனான சந்திப்பின்போது ஜப்பானின் ராணுவத் திறன்களை விரிவுபடுத்துவது, அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களைப் பற்றி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது, இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்காவின் பொருளாதார பங்களிப்பை மேம்படுத்துவதற்கான திட்டத்தை பைடன் அறிமுகப்படுத்தவுள்ளார்.
விநியோக சங்கிலி, தூய எரிசக்தி, உள்கட்டமைப்பு, மின்னிலக்கம் ஆகியவற்றின் மூலம் வட்டார நாடுகளை மிக நெருக்கமாக இணைக்கும் நோக்கம் கொண்டது இத்திட்டம். ஆனால், இந்தத் திட்டம் இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்குச் சொற்ப பலனைத்தான் அளிக்கும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
முன்னதாக, தென்கொரியாவில் இருந்து புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த பைடன், வடகொரியாவின் புதிய அணுவாயுதச் சோதனைகள் பற்றி தமக்கு கவலையில்லை என்று கூறினார்.
பைடன் தென்கொரியாவில் இருந்தபோது, வடகொரியா ஏவுகணை அல்லது அணுவாயுதச் சோதனையில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Tamilmurasu