ஊன்றுகோலுடன் எவரெஸ்ட் ஏறிய தன்னம்பிக்கை மனிதன்

பிரிட்டனைச் சேர்ந்த ஜேமிக்கு காம்ப்ளக்ஸ் ரீஜினல் பெய்ன் சிண்ட்ரோம் ( complex regional pain syndrome) எனப்படும் நோய் உள்ளது. அது அவருக்கு மிக மிகக் கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடியது

ஆனால், 11 நாட்கள் ட்ரக்கிங் செய்து, சுமார் 5,364 மீட்டர் (17,600 அடி) உயரம் கொண்ட எவரெஸ்ட் மலை அடிவாரத்தை அடைந்து, தன் குழந்தைப்பருவக் கனவை நனவாக்கியிருக்கிறார்.

“இந்த சவாலை எதிர்கொண்ட போது, என்னால் இதைச் செய்து முடிக்க முடியும் என்று நானே நம்பாத சமயங்கள் கூட உண்டு ” என்கிறார் அவர்.

மேலும், “நான் மிகவும் சோர்வடைந்திருந்தேன். அது மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம்” என்று அவர் பிபிசியிடம் கூறினார் லேசாக அழுதபடி.

“நான் இதை செய்து முடித்துவிட்டேன் என்று மறுநாள் வரை என்னால் உணரவே முடியவில்லை. நான் ஒரு பாறையில் அமர்ந்து, எவரெஸ்ட்டையும், இமயமலையையும் பார்த்தேன். அதுதான் நான் என் வாழ்நாள் கனவை சாதித்துவிட்டேன் என்று உணர்ந்த தருணம்,” என்கிறார் ஜேமி.

என்ன நடந்தது ஜேமிக்கு

2014 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி, ஜேமி வழக்கமாக தூங்கச் சென்றார். ஆனால், மறுநாள் காலை அவர் கண் விழிக்கும்போது, இடுப்பு பகுதிக்கு கீழ் எல்லாம் செயலிழந்து இருந்தது. ஆம். தூக்கத்தில் அவரது தண்டெலும்பு சிதைந்து விட்டது.

அவருக்கு இந்த சி.ஆர்.பி.எஸ் முடக்கம் இருப்பதைக் கண்டறியவே மேலும் 13 மாதங்கள் ஆகின. இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் காலப்போக்கில் படிப்படியாக இந்த நிலை மேம்படலாம் என்பதுதான் ஒரே வாய்ப்பு.

இதற்காக, அவர் மீண்டும் நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. மேலும் ஒரு கடினமான சிகிச்சைக்கும் பிறகு, அவர் மெதுவாக நகரத் தொடங்கினார். ஆனால் இன்னும் அவர் நடக்க நம்பியிருப்பது ஊன்றுகோலைத்தான்.

 

ஜேமி மெக்ஆன்ஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சவாலை எதிர்கொள்ள பயிற்சி எடுத்துக்கொண்டார். கோவிட் தொற்றுநோய் காரணமாக அவர் இரண்டு முறை மலை ஏறுவது தாமதமானது.

“என் குழுவினர் சிந்திக்க வேண்டிய கடினமான விஷயங்களில் ஒன்று, அவர்கள் தங்கள் கால்களை எங்கு வைக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால் இவ்வளவு உயரத்தில் எல்லாமே சிரமம்தான். ஆனால், நானோ எனது கால்களையும் ஊன்றுகோல்களையும் எங்கு வைப்பது என்று சிந்திக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் எனது ஊன்றுகோல் சறுக்கினால், அது பெரும் தவறாகிவிடும். நான் கீழே விழும்போது, என்னைத் தாங்கி பிடிக்க என் கைகளைக்கூட நீட்ட முடியாது,” என்று எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் தான் எதிர்கொண்ட சவால்களை வெற்றிகரமாக முடித்தபிறகு கூறினார் ஜேமி.

மலையில் உள்ள நினைவிடத்தை அடைந்தபோது, ஜேமி தனது இறந்த தந்தை, சகோதரியின் மகனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து பேசும்போது “பயணம் முழுவதும் அவர்களது நினைவுகளுடன் பயணித்தேன். பல ஆண்டுகளாக நான் நினைத்த இடத்தில், பாறைகளின் குவியலாக ஒரு நினைவுக் கோட்டை கட்டுவது மிகவும் அழகான விஷயம் என்று நினைத்தேன்” என்று கூறினார்.

ஜேமி தனது அடுத்த சவாலை தீர்மானித்திருந்தார், அந்த சவால் அவரது வீட்டுக்கு கொஞ்சம் அருகில்தான் உள்ளது.

இதுகுறித்து பேசும்போது “நான் எப்போதும் எவரெஸ்ட்டை விரும்பினேன். ஆனால் வேல்ஸை நான் எப்போதும் நேசிப்பேன். எனவேதான், அந்த 800 மைல் கடற்கரைப் பாதை நிச்சயமாக எனது விருப்பப் பட்டியலில் உள்ளது,” என்றும் கூறினார் ஜேமி.

 

 

BBC Tamil