டொராண்டோ: கனடாவில் புயல் பாதிப்பால் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.
லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளும் இருளில் மூழ்கியுள்ளன.
அதனைச் சரி செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கனடாவின் ஒண்டாரியோ, கியூபெக் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் கடுமையான சூறாவளிப் புயல் தாக்கியது. அப்போது, இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது.
ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் வீசிய புயலின்போது மணிக்கு 132 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இதன் காரணமாக, அங்குள்ள பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒன்பது லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. இந்தப் புயல், மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை அந்நாட்டு அரசு முடுக்கி விட்டுள்ளது.
“புயல் பாதிப்பால் பல்வேறு நகரங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்ததன் காரணமாகவும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது,” என அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தேவைப்படுவோருக்கு உதவி செய்ய அரசு தயாராக உள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். மின் விநியோகம் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tamilmurasu