இஸ்லாமாபாத்தில் ராணுவம் நிலைநிறுத்தம் – பாகிஸ்தான் அரசு உத்தரவு

பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருக்கிறது எனக்கூறிய இம்ரான் கான், ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதை ஏற்க மறுத்து வருகிறார். பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஐ-இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் தெஹ்ரிக் – ஐ – இன்சாஃப் கட்சி ஆதரவாளர்களுடன் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி நேற்று பேரணியாகச் சென்றார். பேரணியை தடுத்து நிறுத்த இஸ்லாமாபாத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

தடுப்புகளை மீறி இம்ரான்கான் ஆதரவாளர்கள் தலைநகர் நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் பாகிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்கும் வகையில் ராணுவ படைகளை நிலைநிறுத்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இம்ரான்கான் கட்சியினர் சென்ற பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Malaimalar