உலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிப்பு – ஐரோப்பிய ஒன்றியம் தகவல்

உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது.

குரங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம்.

காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. எளிதாக இந்த நோய் பரவிவிடாது என்றாலும் நெருங்கிய உடல் தொடர்புகள், பாலுறவு போன்றவற்றினால் பரவும்.

மனிதர்களுக்கு இந்த வைரஸ் கண்கள், மூக்கு, வாய், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் வாயிலாக பரவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.

அந்நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் கண்காணிக்கப்படுவர் என அமைச்சர் மா. சுப்பிரமணியமும் தெரிவித்தார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் 219 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நோய்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதில் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை நோய் ஏற்படுவது அசாதரணம் எனவும் கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கணக்கின்படி பிரிட்டனில் 71 பேரும், ஸ்பெயினில் 51 பேரும், போர்ச்சுகலில் 37 பேரும் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் 15, அமெரிக்காவில் 9 பேருக்கு குரங்கம்மை ஏற்பட்டுள்ளது.

இந்த நோய் குறைந்த அளவிலேயே பரவும் தன்மை கொண்டிருந்தாலும் பாலியல் உறவுகளில் இருப்பவரள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Malaimalar