‘அந்த மசோதாவைக் கொல்லுங்கள்’ பிக்னிக்-கிற்கு கேஎல்சிசி தோட்ட ஊழியர்கள் இடையூறு செய்தனர்

கேஎல்சிசி பூங்காவில் அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை எதிர்க்கும் போராளிகள் தொடர்ந்து நான்காவது வாரமாக இன்றும் எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தினர்.

அந்த முறை அவர்கள் பிக்னிக் நடத்தி மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது தோட்டத்தில் விழுந்து கிடக்கும் இலைகளை ஒன்று சேர்ப்பதற்கான கருவிகள் இயக்கப்பட்டதால் ஏற்பட்ட சப்தம் காதைச் செவிடாக்கியது. அவர்கள் மீது நேரடியாகத் தண்ணீரும் இறைக்கப்பட்டது.

பெரிய மரம் ஒன்றின் நிழலில் சுமார் நூறு பேர் தங்கள் பாய்களை விரித்து உணவுப் பொருட்களை பரப்பியிருந்த வேளையில் திடீரென தண்ணீர் பாய்ச்சும் கருவிகள் இயங்கத் தொடங்கின. அவர்கள் மீது தண்ணீர் கொட்டியது. அதனால் அவர்கள் உடனடியாக வெளியேற நேரிட்டது.

அந்தச் சம்பவம் தற்செயலாக நிகழ்ந்ததாக இருக்க முடியாது என பிக்னிக்-கில் கலந்து கொண்டிருந்த லியாவ் கோக் பா கூறினார். அவர் கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தின் சமூக உரிமைக் குழுத் தலைவர் ஆவார்.

“கேஎல்சிசி பூங்கா நிர்வாகம் அதனை வேண்டுமென்றே செய்தது. என் தந்தை ஒரு குடியானவர். நீங்கள் காலையிலும் மாலையிலும் தான் செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும். பிற்பகலில் வெப்பமாக இருக்கும் போது நீர் ஊற்றினால் செடிகள் மடிந்து விடும்,” என்றார் அவர்.

கேஎல்சிசி பூங்காவில் பொதுக் கூட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போது தண்ணீர் தெளிக்கும் கருவிகள் திறந்து விடப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி தேசிய இலக்கியவாதி ஏ சாமாட் சையட் கலந்து கொண்ட கூட்டத்தில் நீர் இறைக்கப்பட்டது.

தண்ணீர் தெளிக்கப்படும் இடத்திலிருந்து விலகி இன்னொரு இடத்தில் அந்த நூறு பேரும் அமர்ந்த வேளையில் இலைகளை ஒன்று சேர்ப்பதற்கான கருவிகள் இயக்கப்பட்டன. கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு அந்தக் கருவிகளை தோட்ட ஊழியர்கள் இயக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது இன்னொரு தோட்ட ஊழியர் செடிகளை ஒர் எந்திர ரம்பத்தைக் கொண்டு வெட்டிக் கொண்டிருந்தார்.

பொதுக் கூட்ட மசோதாவுக்கு எதிராக மகஜர்

KillTheBill.org என்னும் அமைப்பு அந்த பிக்னிக்-கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இவ்வாண்டுக்கான கடைசி எதிர்ப்புக் கூட்டம் இதுவாகும். அமைதியான பொதுக் கூட்ட மசோதாவுக்கு எதிரான மகஜரில் கையெழுத்துக்களைத் திரட்டுவதற்கான இயக்கத்தை அது மேற்கொள்ளும். அந்த மசோதா அடுத்த வாரம் மேலவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நாங்கள் இங்கும் இணையம் வழியாகவும் கையெழுத்துக்களைத் திரட்டுவோம். எங்கள் பேராளர்கள் திங்கட்கிழமை அதனை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார்கள்,” என ஏற்பாட்டாளரான அடுக்கா ஸ்ரீ பெர்க்காசா கூறினார்.