தென் சீனக் கடலில் இன்று சீனா கடற்படைப் பயிற்சிகளை நடத்தும் என்று அதன் கடல்துறை ஆணையம் கூறியது.
பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், சீனா இந்தப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. தென் சீனக் கடல் முதல் பசிபிக் தீவுகள் வரையிலான பகுதியில் சீனாவின் ராணுவ ஆதிக்கம் அதிகரித்து வருவதாக அமெரிக்காவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
தெற்கு சீனாவின் ஹைனான் மாநில கடற்கரையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கடல் பகுதியில் சீனா பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது.
பயிற்சியின்போது கிட்டத்தட்ட 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியில் ஐந்து மணி நேரத்திற்குக் கடல் போக்குவரத்து மூடப்பட்டிருக்கும் என்று கடல்சார் பாதுகாப்பு நிர்வாகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் ஹைனானுக்கு அருகிலுள்ள மற்றொரு கடல் பகுதியில் மேலும் ஒரு பயிற்சிக்கு சீனா திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் கிழக்கு கடற்கரையோரத்திலும் மேலும் சில பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.
இதேபோன்ற பயிற்சிகளை சீனா நடத்துவது வழக்கமானது. ஆனால், சீனாவின் ராணுவ ஆதிக்கம் குறித்து அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எச்சரித்து வரும் நிலையில், இந்த பயிற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
தைவான் தொடர்பில் சீனா பதற்றத்தை அதிகரிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வியாழக்கிழமை குற்றம் சாட்டினார். தைவான் வான்பரப்பில் அன்றாடம் சீன போர் விமானங்கள் பறப்பதை அப்போது அவர் சுட்டினார்.
இதற்கிடையே, சீனா-பசிபிக் தீவுகளுக்கு இடையே பரந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான திட்டத்தைக் காட்டும் ஆவணங்கள் கசிந்ததாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அரசாங்கங்கள் எச்சரித்தன.
ஆனால், பசிபிக் தீவுகளுடனான தனது ஒத்துழைப்பு ‘எந்த நாட்டையும் குறிவைத்து’ ஏற்படுத்தப்படவில்லை என்று சீனா கூறியது.
Tamilmurasu