நல்ல மனிதனின் கையில் துப்பாக்கியை கொடுங்கள்- முன்னாள் அதிபர் டிரம்ப் பேச்சு

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த மே 25-ஆம் தேதி துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாகி கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்தக்கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்துள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இந்நிலையில் இது போன்ற துப்பாக்கிசூடு சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்வு கூறியுள்ளார். இது தொடர்பாக ஹூஸ்டனில் நடைபெற்ற நேஷனல் ரைபிள் அசோசியேஷனின் மாநாட்டில் பேசிய டிரம்ப் கூறியதாவது:-

டெக்சாஸ் துப்பாக்கிசூட்டில் பலியானவர்களுக்கு தங்களைத் தற்காத்துக் கொள்ள எந்த வழியும் இல்லை. துப்பாக்கியுடன் இருக்கும் தீய மனிதனை நிறுத்த ஒரே வழி, ஒரு நல்ல மனிதனின் கையில் துப்பாக்கியை கொடுப்பதுதான். அதேபோல் ஒரு பள்ளிக்கு ஒரே நுழைவுப் பாதை மட்டுமே இருக்கும்படி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் வலுவான தடுப்பு அமைப்பு மற்றும் உலோகங்களை கண்டறியும் கருவிகள் போன்றவையும் அமைக்க வேண்டும். உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா 40 பில்லியன் டாலர் கொடுக்க முடியும் என்றால் இதையும் நம்மால் செய்ய முடியும்.

இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.