ஈராக்கில் மூக்கிலிருந்து ரத்தம் கசிந்து மக்கள் சாகக்கூடிய அளவுக்கு மோசமான காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது.
கிரைமியன்-கோங்கோ ரத்தக்கசிவுக் காய்ச்சல் என்ற அந்தக் காய்ச்சல் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது.
இந்த ஆண்டு ஈராக்கில் 111 பேருக்கு அந்த காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 19 பேர் மாண்டுவிட்டதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.
இந்த கிருமித்தொற்றுக்குத் தடுப்பூசி ஏதும் இல்லை. நோய் விரைவாக முற்றக்கூடியது. உடலில் உள்ளேயும் வெளியேயும், குறிப்பாக மூக்கிலிருந்து, ரத்தக் கசிவு ஏற்படும்.
நோய் தொற்றியவர்களில் 40 விழுக்காட்டினர் வரை இறக்கக் கூடும் என்று மருத்துவ உதவியாளர்கள் கூறுகின்றனர்.
ஆடு, மாடு, எருமை போன்ற விலங்குகளின் தோலில் உள்ள நுண்கிருமியால் இந்த நோய் பரவுகிறது.
அதே போல விலங்குகளை அறுக்கும்போது அவற்றின் திசுக்களோ ரத்தமோ பட்டால்கூட மனிதர்களுக்குக் கிருமி பரவலாம்.
கொவிட்-19 தொற்றுடன் ஒப்பிடும்போது தொற்று எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்றாலும் ஈராக்கிய அதிகாரிகள் கிருமிப்பரவல் பற்றிய கவலையில் உள்ளனர்.
Tamilmurasu