சீனாவின் ஷாங்காய் நகரில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி

சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த இரண்டு மாத கால ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் விலக்கி கொள்ளப்பட்டது. ஷாங்காய் அதிகாரிகள் வீட்டு வளாகங்களைச் சுற்றியுள்ள வேலிகளை அகற்றத் தொடங்கினர். இதன் மூலம், நகரத்தின் 25 மில்லியன் குடியிருப்பாளர்களும் விடுதலை அடைந்தது போல் உணர்ந்தனர்.

நேற்று முதல் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கும் மற்றும் மக்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் பொது இடங்களுக்குள் நுழையவும் பொதுமக்கள் ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்று முடிவுகள் பெற்றிருக்க வேண்டும். பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால், அவருக்கும் அவர்களின் நெருங்கிய தொடர்புகளுக்கும் கடுமையான தனிமைப்படுத்தல் விதி இன்னும் அமலில் உள்ளது.

எனினும், ஷாங்காய் நகரவாசிகள் இன்னும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும்.உணவகங்களுக்குள் அமர்ந்து உணவருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. கடைகள் 75 சதவீத திறனில் செயல்படலாம் என்பன போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

ஷாங்காய் நகரில் நேற்று 31 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒரு நாளுக்கு முன்பு 67 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று சற்று குறைந்தது. சீனாவின் பல நகரங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த கடுமையான ஊரடங்கு, பொதுமக்களிடம் கடும் ஆத்திரத்தை தூண்டியது.

அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து பூந்தொட்டி மற்றும் பொருட்களை விரக்தியில் தூக்கி போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் மீதான மக்களின் அதிருப்தியை அதிகரிக்க செய்தது.

 

 

Malaimalar