உக்ரைன் வடக்கு பகுதி நகரங்களை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷியா

ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ ஆயுத உதவி அளிக்கும் அமெரிக்காவிற்கு உக்ரைன் வரவேற்பு தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பீட்டில்  ஹிமார்ஸ் ஏவுகணை அமைப்புகள், பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபரின் ஆலோசகர்  ஆண்ட்ரி யெர்மக், கூட்டாளிகளுக்கு நன்றி என்று கூறியுள்ளார். மேலும் உக்ரைன் அமெரிக்க கொடிகளுக்கு இடையே இரண்டு நாடுகளும் கைகுலுக்கும் படத்தை தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்வதற்கு உதவி வருவதாக போலந்து தெரிவித்துள்ளது. ரஷியா படையெடுப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான  உக்ரைனிலிருந்து தானியங்கள் உள்பட பிற முக்கியப் பொருட்களின் ஏற்றுமதியை எளிதாக்குவதற்காக தனது நாடு எல்லைப் பகுதியில் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாக போலந்தின் பிரதமர் மேட்யுஸ் மொராவில்க்கி கூறியுள்ளார்.

ரஷிய படைகளின் குண்டு வீச்சு தாக்குதல்களுக்கு பயந்து,  செவெரோடோனெட்ஸ்க் நகரில் உள்ள ஒரு ரசாயன ஆலை பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் தஞ்சம் அடைந்துள்ளதாக அப்பிராந்தியத்தின் ஆளுநர் செர்ஹி கெய்டாய் தெரிவித்துள்ளார். அந்த ஆலை பெரிய நகரத்தையொட்டி அமைந்திருப்பதால் இது மரியபோல் உருக்கு ஆலையை விட பாதுகாப்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செவெரோடோனெட்ஸ்க் நகரின் வடக்கே உள்ள ரிட்னே மற்றும் ஸ்வியாடோஹிர்ஸ்க் நகரங்களில் ரஷிய படைகள் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், இரண்டு கிராமங்களை கைப்பற்ற அவர்கள் முயன்ற நிலையில் உக்ரைன் ராணுவத்தின் பதிலடி காரணமாக பின்வாங்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்குப் பகுதியில் உள்ள நகரின் அமைதிச் சதுக்கத்தைச் சுற்றி ரஷிய வீரர்கள் இருப்பது மற்றும் அந்த பகுதியில் பல உடல்கள் கிடப்பது தொடர்பாக வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தப்போவதாக நேற்று அறிவித்தன. இந்த நடவடிக்கை ரஷியாவை பாதிக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தினாலும், பிற உலக நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா பெட்ரோலை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. மேலும் எரிபொருள் விலைகளின் உயர்வும் ரஷியாவுக்குதான் சாதகமாக அமையும் என கூறியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக நடந்த தீவிர சண்டைக்கு பிறகு,  ரஷியப் படைகள் சிவெரோடோனெட்ஸ்க் நகரின் மையப் பகுதியை நெருங்கி உள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நகரின் பாதிக்கும் அதிகமான பகுதிகள் இப்போது ரஷிய படைகளால் (செச்சென் போராளிகள் உட்பட) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்றும் கூறி உள்ளது.

உக்ரைனுக்கு நவீன ராக்கெட் அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை அமெரிக்கா வழங்கும் எனவும், இதன்மூலம் போர்க்களத்தில் உள்ள முக்கிய இலக்குகளை இன்னும் துல்லியமாக தாக்க முடியும் என்றும் அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் கூறினார்.

ரஷிய படைகள் கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஒரு ரசாயன ஆலையைத் தாக்கியது பைத்தியக்காரத்தனம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.

 உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவது குறித்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் உடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். உக்ரைன் பாதுகாப்பை பலப்படுத்துதல், போரிடுவதற்கு ஆயுத விநியோகம் குறித்து விவாதம் நடைபெற்றதாக ரெஸ்னிகோவ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர் உதவி வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷியாவில் இருந்து உரங்கள் மற்றும் தானியங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  ஐ.நா.சபை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐநாவிற்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், உக்ரைனில் நடைபெறும் போரினால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மை பெரிய அளவில் அச்சுறுத்தலாக உள்ளது என்றார். இதை நிவர்த்தி செய்ய ரஷியாவில் இருந்து தானியங்கள் மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்வதை பைடன் அரசு ஆதரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கும் நடவடிக்கையாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்குக்கு  மேல் தடை விதிக்கும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம்  ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவில் இருந்து 90 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது குறையும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்  தெரிவித்துள்ளார்.

ரஷிய படைகள் செவெரோடோனெட்ஸ் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிப்பதாகவும், தங்கள் படையினர் பதிலடி கொடுத்து வருவதாகவும் உக்ரேனிய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷிய படைகளின் தாக்குதலால் அந்த நகரத்தில் 90 சதவீத வீடுகள் சேதமடைந்துள்ளன, முக்கியமான உள்கட்டமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த போரில் மக்களின் உயிரைப் பணயம் வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Malaimalar