உவால்டே: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மாண்ட சிறுவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. உவால்டே நகரில் நிகழ்ந்த இச்சம்பவம் கடந்த சுமார் 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் பள்ளி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆக மோசமான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் ஆகும்.
அந்தத் தாக்குதலில் 19 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.
மாண்டோரில் சிலருக்கான இறுதிச் சடங்கு நடைபெற்றது. அதில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் இதுவரை பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவம் சென்ற மாதம் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
இதற்கு சுமார் 10 நாள்களுக்கு முன்புதான் நியூயார்க் மாநிலத்தின் பஃபலோ நகரில் உள்ள பேரங்காடி ஒன்றில் வேறொரு துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நிகழ்ந்தது. அதில் துப்பாக்கி ஏந்திய 18 வயது ஆடவர் ஒருவர் 10 பேரைக் கொன்றார்.
இந்த இரு சம்பவங்களைத் தொடர்ந்து அமெரிக்காவில் துப்பாக்கிச் சட்டங்கள் தொடர்பிலான விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உள்பட பல ஜனநாயகக் கட்சியினர் புதிய துப்பாக்கிக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதற்குக் குரல் கொடுத்துள்ளனர்.
Tamilmurasu