SAMY VELLU-வின் ம.இ.கா கோட்டை விழுந்தது!

“இந்த அரங்கம் சாமிவேலுவின் காலத்தில்தான் நிரம்பி வழிந்தது. அதற்குப் பிறகு இப்பொழுதுதான் இந்த அளவிற்கு இங்குள்ள மக்கள் திரண்டுள்ளதை பார்க்கிறேன்” என்கிறார் மணியம். சுங்கை சிப்புட் ம.இ.கா கிளைகள் ஒன்றில் பொறுப்பு வகிக்கும் இவர், இனி சுங்கை சிப்புட் ம.இ.கா-வின் கோட்டையாக திகழும் சகாப்தம் முடிந்துவிட்டதாக கருத்துரைத்தார்.

நேற்று மாலை சுங்கை சிப்புட் தாமான் துன் சம்பந்தன் கன்வென்சன் மண்டபத்தில் நடந்த சுங்கை சிப்புட் பொது இயக்கங்களின் குடும்பதின விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

44 இயக்கங்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், BERSIH 2.0-இன் தலைவி அம்பிகா சீனிவாசன், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் தேவராஜ், சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், NIAT தலைவர் ஹஜி தஸ்லீமும் உரையாற்றினர்.

“கட்சி அரசியல் கலப்பற்ற நிலையில் ஒன்று திரண்டுள்ள இவ்வட்டார இயக்கங்கள், இந்தியர்களின் எழுச்சியை முன்னிலைப்படுத்தி மக்களுக்குகான  சேவையை வழங்கும். எனவே, நாங்கள் யாரையும் தட்டிக்கேட்க தயாராகி விட்டோம்” என்றார் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தலைவரான த. நடராஜன், தனது கமுனிங் இளைஞர் மன்றம் இந்நிகழ்வை நடத்த பல தடைகள் உண்டாக்கபட்டன என்றும் அவற்றை கடந்து ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் திரண்டுள்ளது, மக்களிடையே உண்டாகியுள்ள விழிப்புணர்ச்சிக்கு சான்று என்கிறார்.

மூன்று மணி நேரம் தாண்டியும் ஆர்வம் குறையாத அளவில் பங்கெடுத்த மக்களிடையே, சாமி வேலுவின் மீதான பரிவின் தேக்கமும் தென்பட்டது.

“சாமிவேலு தனிப்பட்ட வகையிலே எங்களுக்கு உதவியுள்ளார், ஆனால் மாற்றம் காணும் அரசியல், மக்களுக்கு மாற்று வியூகங்களை அளிக்கிறது. எனவே அரசியல் என்பது இனி இங்கு ஒரு கட்சியின் ஆக்கிரமிப்பில் உள்ள தேங்கிய குட்டையல்ல, அது துள்ளி ஓடும் நீரோடை” என வர்ணித்த தங்கமணி என்ற இளைஞர்  “நாங்கள் கேட்டோம், மகாதீர் என்ன செய்தார்? நகி (“ஒன்றும் கிடையாது)”  என்று சாமிவேலுவே ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டினார்.

சுமார் 30 ஆண்டுகளாக ம.இ.கா-வின் அசைக்க முடியாத தலைவராகவும் 11 தவணைகள் தேர்தலில் வென்று ராபிடா அஜிஸ் அவர்களுக்கு அடுத்த நிலையில் நீண்ட கால அமைச்சராக பதவி வகித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ம.இ.கா-வின் தலைவர் பதவியில் இருந்து விலகிய சாமிவேலுவின் கட்டுப்பாட்டில் இந்தியர்களில் பெரும்பாண்மையோர் இருந்தனர். இவரின் உருவில் அம்னோ கட்டுப்படுத்தி வைத்திருந்த சுங்கை சிப்புட் வட்டார மக்களின் எழுச்சி விழாவாகவே இந்த நிகழ்வு அமைந்திருந்தது. இவர்களை இனி அரசியல்வாதிகள் உரிமையுள்ள மலேசியர்களாக மதிக்கத் தொடங்குவார்கள்.

(நிகழ்வு குறித்த காணாளி விரைவில் பதிவேற்றப்படும்)

TAGS: