ஏவுகணைத் தாக்குதல்களைக் கடந்த வாரம்கூட நடத்திய வடகொரியா ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் முக்கிய அணுவாயுதக் களைவு மாநாட்டுக்கு தலைமை ஏற்று இருக்கிறது. அடுத்த மூன்று வாரங்களுக்கு வடகொரியா அந்தப் பொறுப்பை வகிக்கும்.
ஆயுதக் களைவு மாநாடு எனும் அந்த மாநாடு ஆண்டுக்கு மூன்று முறை ஜெனிவாவில் நடக்கும். தலைமைப் பொறுப்பை நாடுகள் மாறி மாறி ஏற்றுக்கொள்ளும்.
இந்த வாரம், வடகொரியா தலைமை ஏற்கும் முறை. வடகொரியா அவ்வப்போது ஏவுகணை, அணுவாயுதச் சோதனைகளை நடத்தி வருவதால், ஐக்கிய நாட்டு நிறுவனம் அதன்மீது பொருளியல் தடைகளை விதித்துள்ளது.
அந்நாடு தனது ஆயுதங்களைக் களையும் கோரிக்கைகளுக்குப் பிடிகொடுக்காமலும் பேச்சுவார்த்தைகளைப் புறக்கணித்தும் வருகிறது.
அவ்வாறு தடைகளுக்கு உள்ளாகி இருக்கும் வடகொரியா, ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஆயுதக் களைவு மாநாட்டுக்குத் தலைமை ஏற்பது முரணாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் கூறினார்.
மாநாடு இந்த முறை தொடங்கியபோது அதில் அங்கம் வகிக்கும் நாடுகள், வடகொரியாவைக் கண்டிக்கும் கூட்டறிக்கையை விடுத்தன.
ஆனால் வடகொரியா அந்தக் குறைகூறல்களைக் கண்டுகொள்ளவில்லை.
மாநாட்டில் பேசிய ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான வடகொரிய தூதர், தமது நாடு அமெரிக்காவுடன் போர் புரிந்து வருவதாகவும் அதனால் அது தன்னைத் தற்காத்துக் கொள்ள ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டி உள்ளது என்றும் கூறினார்.
Tamilmurasu