இறுதி கட்ட போர் தீவிரம்- உக்ரைனில் 3 முக்கிய பாலங்களை ரஷியா தகர்த்தது

போர் தொடங்குவதற்கு முன்பு சுமார் 1 லட்சம் பேர் வசித்து வந்த செவிரோடோ டொனட்ஸ்க் நகரில் தற்போது 12 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர்.

ரஷிய படைகளின் இறுதி தாக்குதல் நடத்தி வருவதால் அந்த நகரம் இன்னும் ஓரிரு நாளில் வீழ்ந்து விடும் என்ற நிலை உருவாகி உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 மாதங்களை தாண்டி விட்டது.

ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இருந்தபோதிலும் ரஷியாவின் மும்முனை தாக்குத லால் உக்ரைனில் பல நகரங்கள் ரஷியா வசம் வீழ்ந்து விட்டது. தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதியான டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றும் முயற்சியில் ரஷியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அங்குள்ள தொழில் நகரமான செவிரோடோ டொனட்ஸ்க்கின் 80 சதவீத பகுதிகளை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.

மீதமுள்ள 20 சதவீத பகுதிகளை பிடிக்க தொடர் தாக்குதலில் ரஷியா இறங்கி உள்ளது. அந்த நகரில் உள்ள அசோட் ரசாயன ஆலையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்த ஆலை மீது ரஷிய படையினர் கடும் தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் செவிரோடோ டொனட்ஸ்க் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 3 முக்கிய பாலங்களை ரஷிய படையினர் தகர்த்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக உக்ரைன் படையினர் மேலும் முன்னேற முடியாமல் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். போர் தொடங்குவதற்கு முன்பு சுமார் 1 லட்சம் பேர் வசித்து வந்த செவிரோடோ டொனட்ஸ்க் நகரில் தற்போது 12 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர்.

முக்கிய பாலங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டு உள்ளதால் அந்த மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ரஷிய படைகளின் இறுதி தாக்குதல் நடத்தி வருவதால் அந்த நகரம் இன்னும் ஓரிரு நாளில் வீழ்ந்து விடும் என்ற நிலை உருவாகி உள்ளது.

லுஹா்மான்ஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி பெரிய நகரமான செவிரோடோ டொனட்ஸ்க்கை கைப்பற்றி விட்டால் அந்த மாகாணம் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என கூறப்படுகிறது.

 

Malaimalar